» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆளுநர் உரையில் மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் இல்லை: எடப்பாடி பழனிசாமி

திங்கள் 12, பிப்ரவரி 2024 5:53:41 PM (IST)

ஆளுநர் உரையில் மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆளுநர் உரை உப்பு சப்பில்லாத உரை, ஊசிப்போன உணவு பண்டம். எதிர்வரும் ஆண்டில் அரசு என்ன செய்ய உள்ளது என்பது குறித்து ஆளுநர் உரையில் இல்லை. தமிழ்நாடு அரசின் ஆளுநர் உரையில் எந்தவித அறிவிப்பும் முறையாக இல்லை. ஆளுநர் உரை வெறும் வார்த்தை ஜாலங்களாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரையில் குறிப்பிட்டது போல எந்த விதமான மக்கள் நல திட்டங்களையும் தமிழ்நாடு அரசு முழுமையாக செயல்படுத்தவில்லை என்றார்.

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநா் ஆா்.என்.ரவியின் உரையுடன் இன்று (பிப்.12) காலை 10 மணியளவில் தொடங்கியது. எனினும், ஆளுநர் தனது உரையை முழுவதுமாக படிக்காமல் 2 நிமிடங்களில் முடித்தார். சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியதும் ஆரம்பத்தில் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அதிருப்தி தெரிவித்தார். "தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்பட்டுள்ளது. அரசின் உரையில் உள்ள பல பகுதிகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரத் என்று தனது உரையை ஆளுநர் முடித்தார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு ஆளுநருக்கு தயாரித்த கொடுத்த கொள்கை உரையை, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தமிழில் முழுவதுமாக வாசித்தார். இதையடுத்து, தமிழக ஆளுநர் வாசிக்காத உரையை சட்டப்பேரவைக் குறிப்பில் முழுவதுமாக பதிவிட அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவைல் கூட்டம் நிறைவடைவதற்கு முன்னதாகவே புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து, அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்த தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory