» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சமூக சேகவரின் உறுப்புகள் 7 பேருக்கு தானம் : அரசு சார்பில் மரியாதை!

ஞாயிறு 26, நவம்பர் 2023 10:35:57 AM (IST)



குமரியை சேர்ந்த சமூக சேவகர் மூளைச்சாவு அடைந்ததையடுத்து, அவரது உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானம் செய்யப்பட்டது. உடலுக்கு சப்-கலெக்டர் கவுசிக் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று அரசு மரியாதை செலுத்தினர்.

குமரி மாவட்டம் புதுக்கடை கீழ்குளம் அருகே உள்ள சரல்விளையை சேர்ந்தவர் செல்வின் சேகர் (வயது 36). இவர் மருத்துவம் சார்ந்த முதுநிலை பட்டப்படிப்பு படித்துள்ளார். கருங்கல், புத்தன்துறை ஆகிய பகுதிகளில் மருந்தகம் வைத்து நடத்தி வந்தார். இவர் கீதா என்ற பெண்ணை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உண்டு.

செல்வின் சேகர் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தார். அத்துடன் ஆதரவற்று சுற்றித்திரியும் பெரியோர்களுக்கு உணவுகள் அளித்தும், காப்பகத்தில் சோ்த்து அவர்களுக்கு மாத செலவு கட்டணமும் வழங்கியும் வந்துள்ளார். அத்துடன் ஏழை குழந்தைகளை சிலரை படிக்க வைத்து சமூக சேவகராக திகழ்ந்தார்.

இப்படி எண்ணற்ற உதவிகளை செய்து வந்த செல்வின் சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்தபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினா்கள் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும் அவரது உடல் நிலை மோசமானது. தொடா்ந்து மேல்சிகிச்சைக்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவரது மூளையில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. அவரை காப்பாற்றும் நடவடிக்கையில் டாக்டா்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஒரு கட்டத்தில் உடல் நிலை மிகவும் மோசமாகி கோமா நிலைக்கு சென்றார். பின்னர் மூளைச்சாவு ஏற்பட்டது.

செல்வின் சேகர் உயிருடன் இருக்கும் போதே, தான் இறந்த பின்பு தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என மனைவியிடம் கூறியிருந்தார். அதன்படி உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினா்கள் முன்வந்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கண்கள், கல்லீரல், இதயம், நுரையீரல் உள்ளிட்ட 7 உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

அவரது இதயம் கொல்லத்தில் 14 வயது சிறுவனுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக இதயத்தை திருவனந்தபுரத்தில் இருந்து கொல்லத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு சென்று அந்த சிறுவனுக்கு பொருத்தப்பட்டது. மீதமுள்ள 6 உறுப்புகளும் 6 பேருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று அவரது உடல் சொந்த ஊரானா குமரி மாவட்டம் சரல்விளை பகுதிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அவரது உடல் வீட்டில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், ஆசாரிபள்ளம் மருத்துவமனை டீன் பிரின்ஸ் பயஸ் மற்றும் தாசில்தார்கள், கிராம நிர்வாகிகள் உள்பட அரசு அதிகாரிகள் பலரும் நேரில் சென்று உடலுக்கு அரசு மரியாதை செலுத்தினர். மேலும் செல்வின் சேகர் உடலுக்கு உறவினர்கள், ஊர்மக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பலர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory