» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை மாவட்டத்தில் கதர் விற்பனை இலக்கு ரூ.105 இலட்சம் : ஆட்சியர் தகவல்!

திங்கள் 2, அக்டோபர் 2023 12:50:00 PM (IST)



காந்தியடிகளின் 155வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் அண்ணல் காந்தியடிகளின் 155வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு புனித தாமஸ் ரோடு (ஏ.ஆர்.லைன்) பாளையங்கோட்டையில் உள்ள கதர் அங்காடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கார்த்திகேயன், இ.ஆ.ப. அண்ணல் காந்தியடிகளின் திருவுருவ படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழாவினையையும் தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்சியில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: அண்ணல் காந்தியடிகளால் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு ஆண்டு முழுவதும் வாழ்வளிக்க வேண்டுமென்ற சீரிய நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது தான் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம். தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் கதர் அங்காடி, காலணி உற்பத்தி அலகும், பேட்டையில் தச்சுக்கொல்லு உற்பத்தி அலகும், வீரவநல்லூரில் 5 கைத்தறிகளும் இயங்கி வருகிறது. இதனால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்பட்டும், அவர்களின் பொருளாதாரநிலை உயர்வு செய்யப்பட்டும் உத்தமர் காந்தியின் கொள்கையினை முழுவதுமாக கடைபிடித்து இத்துறையினரால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருடாந்திர கதர் விற்பனை குறியீடாக 2022-2023 ஆம் ஆண்டிற்கு ரூ.46.25 இலட்சம் நிர்ணயம் செய்யப்பட்டதில் ரூ.34.05 இலட்சம் விற்பனை எய்தப்பட்டுள்ளது. கிராமப் பொருட்கள் விற்பனை ரூ.28.50 இலட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால பராமரிப்பு உதவித் தொகையாக 432 பயனாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5,000/- வீதம் வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

உத்தமர் காந்தியடிகளின் 155வது பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், அரசு மருத்துவமனை வளாகங்களில் தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் ஆகிய இடங்களில் 02.10.2023 முதல் தீபாவளி முடியும் வரை தற்காலிக விற்பனை நிலையங்கள் செயல்படும். 

மேலும், தரமிக்க அசல் வெள்ளி ஜரிகையினால் ஆன பட்டு சேலைகள், கதர் வேஷ்டிகள், துண்டு ரகங்கள், ரெடிமேட் சட்டைகள், மெத்தை, தலையணைகள், கண்கவரும் கதர் பட்டு ரகங்கள், கதர் பாலியஸ்டர் மற்றும் உல்லன் ஆகிய ரகங்களும், சுத்தமான அக்மார்க் தேன், குளியல் சோப்பு, சாம்பிராணி, பூஜைப் பொருட்கள், பனைவெல்லம் மற்றும் பனை பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகளின் உதவி பெற்று கதர் மற்றும் பாலிவஸ்திரா ரகங்களுக்கு 30%, உல்லன் ரகங்களுக்கு 20% சிறப்பு தள்ளுபடி அனுமதிக்கப்படுகிறது.

அரசு துறைகளில் பணியாற்றும் மாத ஊதியத்தில் 10 சம தவணைகளில் பெற்றிடும் வகையில் கடனுக்கும் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது மக்கள் மற்றும் அரசுத்துறை ஊழியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தீபாவளி வரை எல்லா நாட்களிலும் கதர் அங்காடிகள் செயல்படும். இந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடாக ரூ.105.00 இலட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இக்குறியீட்டினை அடைந்திட பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட அனைவரும் இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் சிறக்க கதர் துணிகளை வாங்கி ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விழாவில் கதர் கிராம தொழில்கள் உதவி இயக்குநர் சே.பாரதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.ஜெய அருள்பதி, கண்காணிப்பாளர் சரவணராஜா , கதர் அங்காடி மேலாளர் ஜான் சாமுவேல் , உதவி இயக்குநர் அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors





Arputham Hospital



Thoothukudi Business Directory