» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் இன்று துக்கம் அனுசரிப்பு: கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கப் பொதுக்கூட்டம் ரத்து
சனி 3, ஜூன் 2023 10:14:14 AM (IST)
ஒடிசாவில் ரயில் விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே துக்கத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (ஜூன் 3) ஒரு நாள் தமிழகத்தில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ் நாட்டினருக்குத் தேவையான உதவிகளைச் செய்திட போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் திருமதி அர்ச்சனா பட்நாயக், ஆகியோர் கொண்ட குழு விபத்து நடைபெற்ற ஒடிசா மாநிலத்திற்கு விரைந்து செல்ல முதல்வர் அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் ஒடிசா இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (3.6.2023) ஒரு நாள் மட்டும் துக்கம் அனுசரிக்கப்படும். மேலும், அரசின் சார்பில் இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகழும் ரத்து செய்யப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ரத்து:
ஒடிசா ரயில் விபத்தை ஒட்டி இன்று நடைபெறவிருந்த கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கப் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில், "கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒடிசாவில் பயங்கர விபத்திற்குள்ளாகி 230-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளது நாட்டையும் - நாட்டு மக்களையும் உலுக்கி அனைவரையும் பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. மனித உயிர்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்துள்ள இந்த படுமோசமான விபத்தில் 900-த்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இத்தகைய சோகமான சூழ்நிலையில், தன் வாழ்நாள் முழுவதும் ஏழை எளியவர்களுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும், மனித நேயத்திற்காகவும் உரக்கக் குரல் எழுப்பிப் பாடுபட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களை நடத்துவது சரியல்ல என்று கழகத் தலைவர் அவர்கள் முடிவு செய்துள்ளார்.
ஆகவே இன்றைய நாள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலைக்கு மட்டும் மரியாதை செலுத்தி, இந்த பயங்கரமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மற்றபடி, முத்தமிழறிஞர் கலைஞரின் 100-ஆவது பிறந்தநாள் தொடர்பாக இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் - பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.
இன்று வடசென்னையில் நடைபெறுவதாக இருந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கப் பொதுக்கூட்டம் வேறொரு நாளில் நடைபெறும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் பூலித்தேவர், ஒண்டி வீரன் நினைவிடங்களில் ஆளுநர் மரியாதை
வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:34:28 PM (IST)

குமரி மாவட்டத்தில் அக்.2ம் தேதி கிராமசபைக் கூட்டம் ஆட்சியர் தகவல்!!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:32:44 PM (IST)

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மறைவு : முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி
வெள்ளி 29, செப்டம்பர் 2023 4:09:34 PM (IST)

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு: 18 பேருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு
வெள்ளி 29, செப்டம்பர் 2023 1:21:55 PM (IST)

பாரதத்தின் உந்து சக்தி விவசாயிகள்தான்: குற்றாலத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
வியாழன் 28, செப்டம்பர் 2023 8:31:11 PM (IST)

திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும்: பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி
வியாழன் 28, செப்டம்பர் 2023 5:40:59 PM (IST)
