» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இரும்பு கம்பியால் தாக்கி பெண் கொலை: ஆண் உடையில் வந்து தீர்த்துக்கட்டிய மருமகள்..!!

புதன் 31, மே 2023 11:13:21 AM (IST)

நெல்லை அருகே மாமியாரை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த மருமகளை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை அருகே சீதபற்பநல்லூரை அடுத்த வடுகன்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகவேல் (64). இவர் மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சீதாலட்சுமி (59). இவர்களுக்கு மாரியப்பன் என்ற மகனும், பாக்கியலட்சுமி என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி கொண்டாநகரத்தில் கணவரின் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

மாரியப்பன் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவருக்கும், கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த ராமலிங்கம் மகள் மகாலட்சுமிக்கும் (25) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மாரியப்பன் தனது பெற்றோரின் வீட்டின் அருகிலேயே மற்றொரு வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் மகாலட்சுமி அடிக்கடி தனது மாமனாரின் வீட்டுக்கு சென்று வந்தார். அப்போது அங்கு வீட்டில் இருந்த மளிகை பொருட்கள் உள்ளிட்ட சிறுபொருட்கள் திருட்டு போனது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாமனாரின் வீட்டுக்கு சென்ற மகாலட்சுமி, அங்கிருந்த பீரோவை திறந்து பணத்தை எடுத்ததாகவும், அதனை பார்த்த மாமியார் சீதாலட்சுமி அவரை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மகாலட்சுமி தனது கணவர், குழந்தைகளை பார்ப்பதற்காக மாமனார், மாமியார் வரக்கூடாது என்று கூறி விட்டு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் சண்முகவேல் மாடுகளில் பால் கறப்பதற்காக வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார். இதனை ேநாட்டமிட்ட மகாலட்சுமி ஆண்கள் அணிவதை போன்று டிராக் பேண்டும், சட்டையும் அணிந்தும், தலையில் ஹெல்மெட் அணிந்தவாறும் இரும்பு கம்பியுடன் நைசாக மாமனாரின் வீட்டுக்குள் நுழைந்தார்.

அங்கு தூங்கி கொண்டிருந்த மாமியார் சீதாலட்சுமியை இரும்பு கம்பியால் மகாலட்சுமி சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அலறி துடித்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். இதையடுத்து சீதாலட்சுமி அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை மகாலட்சுமி பறித்து சென்றார். பின்னர் காலையில் பால் கறந்து விட்டு சண்முகவேல் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் சீதாலட்சுமி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார். பின்னர் அங்கு வந்த மகாலட்சுமியும் எதுவும் அறியாதது போன்று, மாமியாருக்கு என்ன நேர்ந்தது? என்று மாமனாரிடம் கேட்டு நாடகமாடினார்.

இதையடுத்து பலத்த காயமடைந்த சீதாலட்சுமியை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று சீதாலட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே சண்முகவேலின் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அதில், அதிகாலையில் மகாலட்சுமி ஹெல்மெட் அணிந்தவாறு இரும்பு கம்பியுடன் வீட்டுக்குள் செல்வதும், சிறிதுநேரத்தில் வீட்டில் இருந்து மாமியாரின் அலறல் சத்தம் கேட்பதும், பின்னர் வீட்டில் இருந்து பதற்றத்துடன் மகாலட்சுமி வெளியே வருவதும் பதிவாகி இருந்தது. மேலும் மகாலட்சுமி ஹெல்மெட்டை கழற்றியதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இதையடுத்து மகாலட்மியிடம் போலீசார் விசாரித்தபோது, தன்னை அவதூறாக பேசியதால் மாமியாரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். மேலும் நகைக்காக மர்மநபர்கள் மாமியாரை தாக்கியிருக்கலாம் என்று அனைவரையும் நம்ப வைப்பதற்காக திட்டமிட்டு கொலையை அரங்கேற்றி நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து மகாலட்சுமியை கைது செய்த போலீசார், அவரை ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital




Thoothukudi Business Directory