» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றம்

வியாழன் 23, மார்ச் 2023 4:57:33 PM (IST)

தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக மீண்டும் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடைசெய்து, கடந்த அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர் அமைந்த திமுக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்ட மசோதாவுக்கு கடந்த ஆண்டு அக்.1-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து, அக். 19-ம் தேதி சட்டப்பேரவையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது தொடர்பாக ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு தமிழக அரசு பதில் அளித்தது. சில மாதங்களாக மசோதாவை கிடப்பில் போட்டு வைத்திருந்த நிலையில், கடந்த 8-ம் தேதி மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இந்த மசோதாவை நிறைவேற்ற தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறும்போது, ‘‘ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் சட்டத்தை நிறைவேற்ற, தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளது. வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மீண்டும் மசோதாவை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்புவோம். இரண்டாவது முறையாக அனுப்பும்போது, அதை ஆளுநர் நிராகரிக்க வாய்ப்பில்லை’’ என்று தெரிவித்தார். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா இன்று (மார்ச் 23) சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. 

இதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தாக்கல் செய்து பேரவையில் பேசினார்.  இதன் மீது, தமிழக வாழ்வுரிமை கட்சி எம்எல்ஏ வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, சிபிஎம் எம்.எல்.ஏ., பாமக குழுத்தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் பேசினர். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக மீண்டும் நிறைவேற்றப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory