» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புதிய துறைமுகம் கடற்கரை பகுதியில் வளர்ச்சி திட்டப் பணிகள் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!

புதன் 17, டிசம்பர் 2025 3:14:16 PM (IST)



தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரை பகுதியில் மாநகராட்சி மற்றும் துறைமுக நிர்வாகம் சார்பில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: ஜனவரி 10ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு சாலைகள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். கிழக்கு மண்டலத்தில் வார்டு 21 முதல் 28 வரை கழிவுநீர் கால்வாய்கள் மூடி போடாமல் இருந்து வருகிறது. புதியதாக கட்டப்படுகின்ற கழிவுநீர் கால்வாய்களில் சுகாதாரத்தை காக்கும் வகையில் மூடி போடும் வகையில் அமைக்கப்படுகிறது. எஸ்எஸ் பிள்ளை மார்க்கெட் பகுதியில் தற்போது அந்த பணி நடைபெற்று வருகிறது.

புதிய துறைமுகத்தில் உள்ள கடற்கரை பகுதியில் மாநகராட்சியும் துறைமுகமும் இணைந்து வளர்ச்சி பணிகள் செய்து வருகிறது. பொங்கலுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கடற்கரை சாலையில் புதியதாக நடைப்பயிற்சி மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதில் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் முடிவடைந்துள்ளது. கடற்கரை சாலையில் உள்ள படகு குளம் முகாமில் புதியதாக படகு விடுவதற்கான பணிகள் நடைபெறுகிறது. அதுவும் பொங்கலுக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும்.

தெப்பக்குளத்தை எல்லா அரசியல் கட்சிகளும் ஆய்வு செய்து பார்த்துவிட்டு சென்றுள்ளனர். அங்குள்ள ஒரு கல்வெட்டைப் பார்த்து 147 வருடங்களுக்கு முன்பு உள்ளது. தெப்பக்குளத்தில் உள்ள நீரை அவ்வப்போது அப்புறப்படுத்தி வருகின்றனர். 1997 ஆம் ஆண்டு சில பராமரிப்பு செய்யப்பட்டது. 2019 இல் இருந்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. நிரந்தரமாக அதனை சரி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நானும் ஆணையரும் சேர்ந்து ஆய்வு செய்தோம். நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற எண்ணத்தில் முன்பு எப்படி இருந்ததோ அதே போல் பழமை மாறாமல் நீரூற்றுடன் சீர் அமைத்து ஆன்மீக பாதுகாப்போம். 

புதிய மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து பழைய மாநகராட்சி அலுவலகம் வரை ஒரு பக்கம் தான் வாகனங்கள் நிறுத்த வேண்டும் என்று நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வசதிக்காக தான் நடைபாதை அமைக்கப்படுகிறது. சாலையோர வியாபாரிகள் 9000 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலையில் உள்ள ஸ்டேட் பேங்கில் ஆரம்பிக்கப்பட்டு மார்க்கெட் வரை உள்ள வி.இ.ரோட்டில் சாலையோர நடை பாதையில் கடைகள் அமைப்பதற்கு அனுமதி கிடையாது. அதுபோல வாகனங்கள் நிறுத்துவதற்கும் அனுமதி கிடையாது. அது பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். மாநகரில் 60 அடி 40 அடி 20 அடி சாலைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. 

இந்த பகுதி தான் பழைய தூத்துக்குடி. பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் சர்வ சாதாரணமாக அவர்கள் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. 20 அடி சாலையில், 10 கார்கள் நீங்கள் நிறுத்தி விடுகிறீர்கள் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள் ஆகையால் வாகனங்களை பார்க்கிங் உள்ள இடத்தில் கொண்டு நிறுத்த வேண்டும் ஆங்காங்கே சாலைகளில் நிறுத்தக்கூடாது. பொதுமக்கள் தங்களுடைய புகார்களை எந்த நேரமானாலும் மாநகராட்சிக்கு புகார் தெரிவிக்கலாம். நாய்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிவதை கண்டறியப்பட்டு பிடிக்கப்பட்டு வருகிறது. மாடு வளர்ப்போர் வீடுகளில் வளர்த்து பால் வியாபாரத்தை செய்ய வேண்டும். பாதாள சாக்கடை திட்டப் பணிகளும் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதில் வரப்படுகின்ற கழிவு நீரை சுத்திகரித்து தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எல்லா பகுதி வளர்ச்சிக்கும் பாரபட்சமின்றி மக்கள் பணியாற்றி வருகிறோம். பொதுமக்களின் மகிழ்ச்சி தான் எங்கள் மகிழ்ச்சி என்று பேசினார்.
 
பின்னர் ஒரு பிறப்பு சான்றிதழ், 3 முகவரி சான்றிதழ் உடனடியாக வழங்கினார். நிகழ்ச்சியில் உதவிஆணையர் வெங்கட்ராமன், நகரமைப்பு திட்ட செயற்பொறியாளர் வேலாயுதம், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ்கண்ணா, சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், இளநிலை பொறியாளர் பாண்டி, உதவி பொறியாளர்கள் ஹரிஹரன், நித்தியகல்யாணி, அனுசௌந்தர்யா, தொழில்நுட்ப உதவியாளர்கள் சரண்பிரசாத், பிரின்ஸ் பிரதீப், ஆனந்தஜோதி, கவுன்சிலர்கள் ராமுஅம்மாள், எடின்டா, மும்தாஜ், தனலட்சுமி, பேபி ஏஞ்சலின், ரெக்ஸ்லின், மரியகீதா, போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பர், வட்ட செயலாளர் பொன்ராஜ், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, உள்பட பொதுமக்கள் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory