» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வியாபாரி வீட்டில் நகை, ரூ.2½ லட்சம் திருடிய 2 பேர் கைது : சினிமா பாணியில் கைவரிசை!!

வியாழன் 9, மே 2024 9:12:10 AM (IST)

காயல்பட்டினம் வியாபாரி வீட்டில் நகை, ரூ.2½ லட்சம் திருடிய வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் உச்சினி மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தர்மலிங்க நாடார் மகன் செல்வந்திரன் (57). இவர் காயல்பட்டினம் கடற்கரை சாலையில் காய்கறி கடை நடத்தி வருகிறார். மேலும் ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். இவரது ் இரண்டாவது மகன் ஆனந்த லிங்கம் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2-ந் தேதி தர்மலிங்கம் நாடார் வீட்டுக்கு வாலிபர் ஒருவர் வந்தார். அப்போது வீட்டில் இருந்த அவரது மனைவி பார்வதியிடம், ஸ்ரீவைகுண்டம் சிறையில் உள்ள உங்களது மகன் ஆனந்தலிங்கத்தின் நண்பர் என்றும், உங்கள் மகனை திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்துவதற்காக கொண்டு வருகிறார்கள். அவரை பார்க்க வருமாறு என்னிடம் கூறினார். 

அவரை எப்படி பார்க்க வேண்டும்? என்ற வழிமுறைகளை நான் போன் மூலம் சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். இதை நம்பி பார்வதியும், செல்வேந்திரனும் வீட்டை பூட்டிவிட்டு வழக்கம் போல் சாவியை மீட்டர் பாக்ஸில் வைத்து விட்டு புறப்பட்டுச் சென்றனர். வீரபாண்டியபட்டினம் அருகே சென்றபோது அந்த வாலிபர் செல்வேந்திரனின் செல்போனில் தொடர்பு கொண்டு, உங்கள் மகனை திருச்செந்தூர் கோர்ட்டில் கொண்டு வரவில்லை. வேறு கோர்ட்டுக்கு கொண்டு சென்று விட்டார்கள். எனவே திரும்பி செல்லுங்கள். வேறொரு நாளில் அவரை பார்க்க ஏற்பாடு செய்கிறேன், என கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து அவர்கள் வீட்டுக்கு வந்தபோது, வீட்டிற்குள் இருந்த இரண்டு பவுன் நகை, ரூ.2½ லட்சம் திருடப்பட்டு இருந்தது. இதில் சந்தேகம் அடைந்த தம்பதியர், அந்த வாலிபருக்கு போன் செய்துள்ளனர். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.இதுகுறித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக்அப்துல்காதர், சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கண்ணன் ஆகியோர் தலைமையில் தனிப்பட அமைத்து விசாரணை நடத்தினர்.

இதில், செல்வேந்திரன் வீட்டுக்கு வந்தவர் சேதுக்குவாய்த்தான் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த விஜயராஜ் மகன் சத்தியமூர்த்தி என்ற சதீஷ்(24) என்பதும், இவர் மீது தூத்துக்குடி, தாளமுத்து நகர், தட்டப்பாறை, குரும்பூர், ஆறுமுகநேரி, ஏரல், ஸ்ரீவைகுண்டம், போன்ற போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. அவர் புதுச்சேரியில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று சத்தியமூர்த்தியையும், அவரது கூட்டாளி சச்சின் என்பவரையும் பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், சிறையில் இருந்தபோது ஆனந்தலிங்கம் தனது வீட்டில் பணம், நகை இருப்பது குறித்தும், வீட்டை பூட்டி விட்டு வெளியே சாவியை வைக்கும் இடத்தையும் கூறினாராம். இதை தொடர்ந்து நடிகர்கள் செந்தில், கவுண்டமணி நடித்த சினிமா படக்காட்சி போல சில நாட்களில் சிறையில் இருந்து வெளியே வந்த சத்தியமூர்த்தி கூட்டாளியான சச்சினுடன் சேர்ந்து ஆனந்தலிங்கம் வீட்டில் நகை, பணத்தை திருடியதை ஒப்புக் கொண்டனர். 

அவர்களிடம் இருந்து ரூ.2.40 லட்சத்தை போலீசார் மீட்டனர். பின்னர் அவர்களை திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்செய்தனர்.  நீதிபதி உத்தரவின் பேரில் அந்த 2 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். சினிமா பாணியில் நடந்த இந்த திருட்டு சம்பவத்தை துப்பு துலக்கி 5 நாட்களில் திருடர்களை கைது செய்த போலீசாரை எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory