» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மக்களவைத் தேர்தல்: நெல்லை, தென்காசியில் விறுவிறுப்பான வாக்குப்ப்பதிவு!

வெள்ளி 19, ஏப்ரல் 2024 12:13:51 PM (IST)

மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு நெல்லை, தென்காசி, மாவட்டங்களில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து 16 லட்சத்து 54 ஆயிரத்து 503 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிப்பதற்காக 1,810 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இதற்காக அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து நேற்று மதியத்திற்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு வாக்குச்சாவடிகளுக்கு அரசியல் கட்சியினரின் பூத் ஏஜெண்டுகள் வந்து சேர்ந்தனர். அவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் மாதிரி ஓட்டு போட்டு காண்பித்தனர். தொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் காலையில் வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டு போட்டனர்.

கிராமங்கள் தொடங்கி நகர்புறங்கள் வரையிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். ஒருசில பூத்களில் வாக்குப்பதிவு சற்று தாமதமாக தொடங்கியது.

நெல்லை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும், ஆட்சியருமான கார்த்திகேயன் பாளை தூய யோவான் பள்ளியில் ஓட்டு போட்டார். தொடர்ந்து அவர் வாக்குச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் வந்து வாக்களிப்பதற்காக சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்கள் தன்னார்வலர்கள் உதவியுடன் நாற்காலியில் அழைத்துச்செல்லப்பட்டு ஓட்டுப்போட்டு சென்றனர். ஒரு சில மையங்களில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்ப்பதற்காக காத்திருப்பு மையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் முதல் முறையாக ஓட்டுப்போட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோர் மிகவும் மகிழ்ச்சியுடன் வாக்குச்சாவடிகளில் இருந்து வெளியே வந்தனர். அவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக ஓட்டுப்போட்டுவிட்டு வெளியே வந்தபின்னர் மை வைத்த விரலை நீட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

தென்காசி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,743 வாக்குச்சாவடிகளிலும் இன்று காலையில் வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்குப்பதிவு செய்துவிட்டு சென்றனர். தென்காசி(தனி) தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 16 ஆயிரத்து 183 வாக்காளர்கள் உள்ள நிலையில் காலை முதலே பெரும்பாலானோர் ஓட்டுப்பதிவு செய்தனர்.

இதனையொட்டி தென்காசி பாராளுமன்ற தொகுதி முழுவதும் பதற்றமான 106 வாக்குச்சாவடிகள், மிக பதற்றமான 14 வாக்குச்சாவடிகளில் போலீசாருடன் துணை ராணுவத்தினரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளை ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கமல் கிஷோர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக ஆட்சியர் கமல் கிஷோர் தென்காசி மஞ்சம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வாக்கினை பதிவு செய்தார். ஒரு சில வாக்குப்பதிவு மையங்களில் எந்திரங்கள் பழுது காரணமாக ஓட்டுப்பதிவு சற்று தாமதமானது. எனினும் உடனடியாக எந்திரங்கள் பழுது பார்க்கப்பட்டு மீண்டும் ஓட்டுப்பதிவு தொடங்கியது.

அதேநேரத்தில் காலையில் இருந்து வெயிலின் தாக்கமும் சற்று அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து நீண்ட வரிசையில் ஓட்டுப்போட காத்திருந்த வாக்காளர்களின் வசதிக்காக சாமியானா பந்தல், ஓலை பந்தல் உள்ளிட்டவைகளும் போடப்பட்டிருந்தது. இதேபோல் வாக்குச்சாவடிகள் முன்பு குடிநீர் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory