» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முதலுதவி சிகிச்சை அளிக்க தயங்க கூடாது : எஸ்பி பாலாஜி சரவணன் அறிவுறுத்தல்

சனி 18, மார்ச் 2023 3:42:16 PM (IST)



விபத்தில் காயம்பட்டவர்களுக்கு உதவும் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என எஸ்பி பாலாஜி சரவணன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி காவல்துறையினர் விபத்து மற்றும் மாரடைப்பு போன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் பொதுமக்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றலாம் என்பது குறித்து திருநெல்வேலி ஸ்ரீசக்தி மருத்துவமனை சார்பாக மருத்துவ நிபுணர்கள் இன்று முதற்கட்டமாக திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் உட்கோட்டங்களைச் சேர்ந்த காவல்துறையினருக்கு திருச்செந்தூர் ஐ.எம்.ஏ மஹாலில் வைத்து பொம்மை மனித உடல் மற்றும் மின் திரை மூலம் விபத்து மற்றும் பல்வேறு பாதிப்புகள் மூலம் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு முதலுதவி செய்வது குறித்து செய்து காண்பித்து மிக சிறப்பாக செயல்முறை விளக்கத்துடன் பயிற்சியளித்தனர். இந்த முதலுதவி பயிற்சி வகுப்பில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்வதன் முக்கியத்துவம் குறித்தும், எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. 

அதன்படி, விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தண்ணீர் உட்பட எதையும் முதலில் சாப்பிடுவதற்கோ, குடிப்பதற்கோ கொடுக்க கூடாது. காயமடைந்தவர்களுக்கு அடிப்பட்ட இடத்தில் இரத்தப் போக்கு ஏற்பட்டால் காயத்தை சுத்தமான துணியால் கட்டி அதற்கு அழுத்தம் கொடுத்து கட்ட வேண்டும். இரத்தப்போக்கு ஏற்பட்ட இடத்தில் ரப்பர் அல்லது நைலான் கயிற்றால் கட்டக்கூடாது. கை அல்லது கால் விரல்கள் துண்டிக்கப்பட்டால், அந்த துண்டிக்கப்பட்ட பாகத்தை சுத்தமான துணியால் மூடி, அதனை தண்ணீர் புகாமல் ஒரு பாலீதீன் பையில் போட்டு கட்டி ஐஸ் கட்டிகளை வைத்து ஒரு பெட்டியில் அல்லது வேறு ஒரு பாலீதீன் பையில் வைத்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும், தலை காயம் ஏற்ப்பட்ட நபரை அனாவசியமாக அசைக்க வேண்டாம். 

வாய் மற்றும் மூக்கு பகுதியில் இரத்தப்போக்கு ஏதேனும் இருந்தால் அடிப்பட்டவரை ஒருபக்கமாக சாய்த்தவாறு படுக்க வைக்க வேண்டும். விபத்து நடந்த நிமிடத்தில் இருந்து, பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்க்கும் வரை உள்ள நேரம் மிகவும் பொன்னானது. ஆகவே அவர்களை எவ்வளவு விரைவாக மருத்துவமனையில் அனுமதிக்க இயலுமோ அந்த அளவு வெகு விரைவாக மருத்துவமனையில் அனுமதித்து அவர்களது உயிரை காப்பாற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு முதலுதவி பயிற்சிகள் குறித்து ஸ்ரீசக்தி மருத்துவனை எலும்பியல் மற்றும் விபத்து காய அறுவை சிக்சை மருத்துவர் வெங்கடேஷ் பாபு தலைமையிலான மருத்துவமனை மருத்துவ குழுவினர் எடுத்துரைத்தனர்.

இந்த முதலுதவி பயிற்சி வகுப்பில் திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், காவல் ஆய்வாளர்கள் திருச்செந்தூர் முரளிதரன், திருச்செந்தூர் குற்றப்பிரிவு கனகபாய், தட்டார்மடம் பவுலோஸ் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் பலர் கலந்துகொண்டனர். மேலும் விபத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு காவல்துறையினர் மட்டுமல்லாமல் பொதுமக்களும் உதவுவதற்காகவே அரசு "குட் சமாரிட்டன் சட்டம்” (Good Samaritan Law) என்ற சட்டத்தை இயற்றியுள்ளது. 

இதன்படி இதுபோன்று பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருப்பவர்களை பொதுமக்கள் மனிதாபிமானத்தோடு, அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதிக்கலாம், சிகிச்சைக்கு அனுமதிப்பவர்களிடம் எந்த மருத்துவமனையும் முதலுதவி அளிக்க மறுக்கவோ அல்லது அதற்கு கட்டணம் கேட்கவோ கூடாது. அதே போன்று மருத்துவமனையிலோ, காவல்துறையினரிடமோ உதவி செய்பவர்கள் பெயர் மற்றும் முகவரி போன்ற விபரங்களை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. 

விபத்தில் காயம்பட்டவர்களுக்கு உதவும் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகவே இதுபோன்ற ஆபத்தான சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு பொதுமக்கள் தைரியமாக உதவலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory