» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்க தாக்குதலில் ஈரானின் மிக உயரமான பாலம் அழிவு: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 3:51:00 PM (IST)

ஈரானை மீண்டும் கற்காலத்திற்கே கொண்டு செல்லும் வகையில் தாக்குவோம்" என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்த சில மணி நேரங்களிலேயே, ஈரானின் மிக உயரமான 'பி1' (B1) பாலம் அமெரிக்கப் படைகளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு தென்மேற்கே சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கராஜ் நகரில் இந்தப் பாலம் அமைந்துள்ளது. 447 அடி உயரமுள்ள தூண்களைக் கொண்ட இந்தப் பாலம், மேற்கு ஆசியாவிலேயே மிக உயரமான பாலமாகக் கருதப்படுகிறது.
தாக்குதலுக்குள்ளான பி1 பாலத்திலிருந்து கரும்புகை எழுவதைக் காட்டும் வீடியோ காட்சிகளைத் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், இந்தப் போர் மேலும் தீவிரமடையும் என எச்சரித்துள்ளார்.
பாலம் அமைந்துள்ள அல்போர்ஸ் மாகாணத்தின் துணை ஆளுநர் கோத்ரத்துல்லா செய்ஃப் வெளியிட்டுள்ள தகவலின்படி: இந்தத் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 95 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, இரண்டாவது முறையாகத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அரசுத் தொலைக்காட்சி குற்றம் சாட்டியுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் அழிவு நிச்சயம்
தாக்குதல் குறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "ஈரானின் மிகப்பெரிய பாலம் இடிந்து விழுந்துள்ளது; இனி அது ஒருபோதும் பயன்பாட்டிற்கு வராது. 5 வாரங்களாக நீடித்து வரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். நாடு மிச்சமில்லாமல் அழிவதற்கு முன்னதாக ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இதுவே சரியான தருணம். இல்லையெனில் இன்னும் பல அழிவுகள் நிகழும்."
ஈரான் பதிலடி
அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்கு ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் (X) தளத்தில்: "முழுமையடையாத பாலங்கள் போன்ற பொதுமக்கள் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவது ஈரானியர்களைச் சரணடையச் செய்யாது. இது எதிரியின் தார்மிக வீழ்ச்சியையும், தோல்வியையுமே காட்டுகிறது," என்று பதிவிட்டுள்ளார்.
கட்டுமானப் பணிகள் இன்னும் நிறைவடையாத நிலையில், ஈரானின் பெருமைக்குரிய அடையாளமாகத் திகழ்ந்த இந்தப் பாலம் தகர்க்கப்பட்டிருப்பது மேற்கு ஆசியாவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உடன்பாடு எட்டப்படாவிட்டால் இதுவரை கண்டிராத தாக்குதல்: ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை!
வியாழன் 9, ஏப்ரல் 2026 12:48:45 PM (IST)

அமெரிக்காவுக்கு எதிரான போரில் வரலாற்று வெற்றி: ஈரான் அரசு அறிக்கை!
புதன் 8, ஏப்ரல் 2026 10:19:15 AM (IST)

இருவார போர் நிறுத்தத்திற்கு ட்ரம்ப் அழைப்பு: ஈரான் ஒப்புதல் - ஹார்முஸ் நீரிணை திறக்க முடிவு!
புதன் 8, ஏப்ரல் 2026 10:17:54 AM (IST)

தற்காலிக போர்நிறுத்த நடவடிக்கைக்காக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க முடியாது: ஈரான் திட்டவட்டம்
திங்கள் 6, ஏப்ரல் 2026 5:34:47 PM (IST)

ஹார்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் பாலங்கள், மின் நிலையங்கள் தகர்க்கப்படும்: டிரம்ப் மிரட்டல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:26:59 AM (IST)

பாகிஸ்தானில் மக்கள் கொந்தளிப்புஎதிரொலி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80 குறைப்பு!
சனி 4, ஏப்ரல் 2026 5:10:06 PM (IST)







