» செய்திகள் - விளையாட்டு » உலகம்

துபாயில் யூத மத குரு படுகொலை வழக்கு: 3 பேருக்கு மரண தண்டனை!

செவ்வாய் 1, ஏப்ரல் 2025 11:53:15 AM (IST)

துபாயில் மால்டோவா நாட்டை சேர்ந்த யூத மத குரு சுவி கோகன் படுகொலை வழக்கில், 3 பேருக்கு மரண தண்டனை மற்றும் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.  

இஸ்ரேல் குடியுரிமை பெற்ற மால்டோவா நாட்டை சேர்ந்தவர் சுவி கோகன் (28). இவர் நியூயார்க் நகரை தளமாகக் கொண்டு செயல்படும் யூத மதத்தின் முக்கிய கிளையான சாபாத் லுபாவிச் இயக்கத்தின் தூதராக செயல்பட்டு வந்தார். அமெரிக்க குடியுரிமை பெற்றவரான அவரது மனைவி ரிவ்கி கடந்த 2008-ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட மத குரு கவ்ரியல் ஹோல்ட்ஸ்பெர்க்கின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவி கோகன் துபாயில் உள்ள அல் வாசல் சாலை பகுதியில் யூதர்களுக்கான பிரத்யேக மளிகை கடை நடத்தி வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு இஸ்ரேலுடன் செய்து கொள்ளப்பட்ட ஆபிரகாம் அக்கார்டு உடன்படிக்கை மூலம் அமீரகத்தில் இஸ்ரேலியர்கள் ஏராளமானோர் வசிக்க தொடங்கினர். அவர்களுக்கான பொருட்களை இறக்குமதி செய்து சுவி கோகன் விற்பனை செய்து வந்தார்.

இந்த நிலையில் அவர் கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் 21-ந் தேதி முதல் மாயமானார். இது குறித்து துபாய் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்தநிலையில் கடந்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் அபுதாபியில் அவரது உடல் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து அபுதாபி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் சந்தேகத்துக்கிடமான உஸ்பெகிஸ்தானை சேர்ந்த ஒலிம்பாய் டோஹிரோவிச் (28), மக்முத்ஜோன் அப்துல்ரஹிம் (28) மற்றும் அசிஸ்பெக் கமிலோவிச் (33) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், கொலைக்கு உடந்தையாக இருந்த மற்றொருவரும் கைது செய்யப்பட்டார்.தொடர்ந்து அரசு பொது வழக்குத்துறை புலன் விசாரணை செய்ய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. 

இதையடுத்து, இந்த வழக்கு அபுதாபி மேல்முறையீட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவில் நேற்று தீர்ப்பு வெளியானது. இதில் குற்றம் சாட்டப்பட்ட உஸ்பெகிஸ்தானை சேர்ந்த 3 பேரின் குற்றம் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதாக அபுதாபி மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் உடந்தையாக இருந்த மற்றொரு நபருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


New Shape Tailors




CSC Computer Education



Thoothukudi Business Directory