» செய்திகள் - விளையாட்டு » உலகம்
உக்ரைன் - ரஷ்யா போரை டிரம்ப் முடிவுக்கு கொண்டு வருவார் : ஜெலன்ஸ்கி நம்பிக்கை
சனி 16, நவம்பர் 2024 10:49:01 AM (IST)
அமெரிக்காவின் புதிய நிர்வாகம் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வரும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷியா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் படையெடுத்தது. உக்ரைனும் இதற்கு எதிராக போரில் ஈடுபட்டு வருகிறது. எனினும், போரானது 2 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வரும் தூதரக மற்றும் அமைதி பேச்சுவார்த்தை இதில் பெரிய பலன் எதனையும் தரவில்லை. உக்ரைன் தொடர்ந்து அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை கோரி வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ராணுவ உதவியை வழங்கி வருகின்றன.
ரஷியாவுக்கு வடகொரியாவும் ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது. இது போரை தீவிரப்படுத்தும் செயல் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். இதனால், போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் பலன் ஏற்படாது என்றும் கூறினார்.
சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று உள்ளார். இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேட்டி ஒன்றில், அமெரிக்கா மற்றும் உக்ரைன் இடையேயான உறவுகள் மற்றும் ரஷிய போர் பற்றிய டிரம்புடனான கடந்த கால விவாதங்கள் ஆகியவற்றை பற்றி குறிப்பிட்டார்.
இதுபற்றி அவர் கூறும்போது, எங்களுடைய நிலைப்பாட்டை பற்றி அவர் (டிரம்ப்) கேட்டறிந்து கொண்டார். எங்களுடைய நிலைப்பாட்டிற்கு எதிராக எதனையும் கூறி நான் கேட்கவில்லை என்றார்.
ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி டிரம்ப் உங்களை வலியுறுத்தினாரா? என கேட்டதற்கு பதிலளித்த ஜெலன்ஸ்கி, நாங்கள் ஒரு சுதந்திர நாடு. இந்த போரின்போது, என்னுடைய நாட்டு மக்களும், நானும், அமெரிக்காவின் டிரம்ப் மற்றும் பைடன் மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம் என்று கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறும்போது, டிரம்பின் தலைமையின் கீழ், போரானது விரைவில் முடிவுக்கு வரும் என்றார். டிரம்பின் நிர்வாகம், விரைவான தீர்வு காண்பதில் முன்னுரிமை அளிப்போம் என உறுதி கூறியுள்ளவற்றை சுட்டிக்காட்டி, அவர் தன்னுடைய நம்பிக்கையை தெரிவித்து உள்ளார்.
அமைதி வேண்டும் என்பதே எங்களுக்கு மிக முக்கியம். இதனால், எங்கள் மீது திணிக்கப்பட்ட அநீதியால், எங்களுடைய குடிமக்களை இழந்து வருகிறோம் என்ற உணர்வு ஏற்படாது. போர் முடிவுக்கு வரும். ஆனால், அதற்கான சரியான தேதியை கூற முடியாது. வெள்ளை மாளிகையை தலைமையேற்று நடத்தவுள்ள நிர்வாகத்தின் கொள்கைகள் நிச்சயம் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வரும் என்று அவர் கூறியுள்ளார்.