» செய்திகள் - விளையாட்டு » உலகம்

புதிய அரசில் எலான் மஸ்க், விவேக் ராமசாமிக்கு முக்கிய பதவி: டிரம்ப் அறிவிப்பு

வியாழன் 14, நவம்பர் 2024 8:34:41 AM (IST)



அமெரிக்காவில் அமையும் புதிய அரசில் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமிக்கு முக்கிய பதவி வழங்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 5-ந் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்டு டிரம்ப் பெரும்பான்மைக்கு தேவையானதை விட அதிக வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். இதனையடுத்து, அவர் வருகிற ஜனவரி மாதம் 20-ந் தேதி அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்க உள்ளார்.

2-வது முறையாக அதிபராக பதவியேற்க இருக்கும் டிரம்ப், தனது ஆட்சியில் அரசாங்கத்தின் நிர்வாக பொறுப்பை கவனிக்க உள்ளவர்கள் குறித்த அறிவிப்பை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது உற்ற நண்பரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளி தொழிலதிபரும், அரசியல்வாதியுமான விவேக் ராமசாமிக்கு ஆட்சி நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளை வழங்கி உள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மகத்தான எலான் மஸ்க்கும், அமெரிக்க நாட்டின் மீது பற்று கொண்ட விவேக் ராமசாமியும் கூட்டாக இணைந்து அரசாங்கத்தின் செயல்திறன் துறையை தலைமை தாங்கி வழிநடத்துவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.

இந்த 2 அமெரிக்கர்களும் இணைந்து எனது ஆட்சி நிர்வாகத்தில் அதிகப்படியான விதிமுறைகளை தளர்த்துவது, தேவையற்ற செலவுகளைக் குறைப்பது, அரசு நிறுவனங்களை மறுகட்டமைப்பது போன்ற பணிகளில் கவனம் செலுத்துவார்கள்.

இது ‘சேவ் அமெரிக்கா’வுக்கு மிகவும் அவசியம். இது நிச்சயம் அரசு நீதியை வீணடிப்பவர்களுக்கு அதிர்வலைகளை தரும். ஜூலை 4, 2026 வரை அவர்கள் இருவரும் இந்த பொறுப்பில் தொடர்வார்கள்.

அரசின் செயல்திறன் துறையானது அரசாங்கத்திற்கு வெளியே இருந்து ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கும். மேலும், பெரிய அளவிலான சீர்திருத்தங்களுக்கு வெள்ளை மாளிகை, மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலகத்துடன் சேர்ந்து தொழில்முனைவோர் இடையிலான ஒரு அணுகுமுறையை உருவாக்கும். இந்த அரசு இதுவரை யாரும் பார்த்திராத வகையில் இருக்கும்.

எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி இருவரும் இணைந்து அரசின் செயல்திறனைக் கருத்தில் கொண்டு மாற்றங்களைச் செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதே நேரத்தில், அனைத்து அமெரிக்கர்களின் வாழ்க்கையையும் சிறப்பாக்குவார்கள். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார். இதன் மூலம் டிரம்ப் நிர்வாகத்தில் பணியாற்றப்போகும் முதல் இந்தியர் என்கிற பெருமையை விவேக் ராமசாமி பெற்றுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors



Arputham Hospital





Thoothukudi Business Directory