» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் 27 பேர் பலி; 60 பேர் படுகாயம்
ஞாயிறு 10, நவம்பர் 2024 9:42:44 AM (IST)
பாகிஸ்தானில் ரயில் நிலையத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். 60 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த இயக்கங்கள் அண்டை நாடுகளில் பயங்கரவாதத்தை பரப்பி வரும் அதே வேளையில் சொந்த நாட்டிலும் பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றன. பயங்கரவாத இயக்கங்களை ஒடுக்க முடியாமல் பாகிஸ்தான் ராணுவம் திணறி வருகிறது.
இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இயங்கி வரும் ‘பலுச் விடுதலை படை’ என்கிற பிரிவினைவாத இயக்கம் அந்த நாட்டு ராணுவத்துக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்கக்கோரி போராடி வரும் பலுச் விடுதலை படை, போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றன. சமீப மாதங்களாக பலுச் விடுதலை படை தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவில் உள்ள ரயில் நிலையம் நேற்று காலை வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. ரயில் நிலையத்தில் நடைமேடையில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர். மக்களின் பாதுகாப்புக்காக ராணுவ வீரர்கள் ஆங்காங்கே நின்றிருந்தனர்.
அப்போது ரயில் நிலையத்தின் நடைமேடையில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. ரயில் நிலையத்தின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. கரும்புகை மண்டலம் எழுந்தது. குண்டு வெடிப்பை தொடர்ந்து ரயில் நிலையத்தில் இருந்த மக்கள் உயிர் பயத்தில் அங்கும் இங்குமாக சிதறி ஓடினர். எங்கு பார்த்தாலும் மரண ஓலம் கேட்டது.
குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பலர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனால் அந்த இடமே போர் களம் போல காட்சியளித்தது.
குண்டு வெடிப்பு குறித்த தகவல் கிடைத்ததும் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரயில் நிலையத்தை சுற்றி வளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு ஆம்புலன்சுகளில் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்தவர்களில் பலர் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இன்னும் சிலர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பிறகு சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இப்படியாக இந்த குண்டு வெடிப்பில் மொத்தம் 27 பேர் பலியாகினர். அவர்களில் 14 பேர் ராணுவ வீரர்கள் ஆவர். மேலும் 62 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பு தற்கொலைப்படை தாக்குதல் என போலீசார் தெரிவித்தனர். வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட பையுடன் ரயில் நிலையத்துக்குள் வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி அவற்றை வெடிக்க செய்ததாக போலீசார் கூறினர்.
இந்த தாக்குதல் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர்தான் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று அங்கிருந்து புறப்பட்டு சென்றதாகவும், ரயில் புறப்படும் முன் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால் மிகப் பெரிய அளவில் உயிர் தேசம் ஏற்பட்டிருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு பலுச் விடுதலை படை பொறுப்பேற்றுள்ளது.
ராணுவ வீரர்களை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ள பலுச் விடுதலை படை மாகாணத்தின் வளர்ச்சியை புறக்கணிக்கும் அதே வேளையில் பலுசிஸ்தானின் வளங்களை மத்திய அரசு சுரண்டுவதாக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் அந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள பாகிஸ்தான் அரசு, நாச வேலைகளை செய்ய பலுச் விடுதலை படையை வெளிநாட்டு சக்திகள் இயக்குவதாக குற்றம் சாட்டியது.