» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கனடாவில் இந்திய தூதர்கள் 6 பேர் வெளியேற்றம்: இந்தியா பதிலடி

புதன் 16, அக்டோபர் 2024 3:37:19 PM (IST)

கனடாவில் இந்திய தூதர்கள் 6 பேரை அந்நாட்டு அரசு வெளியேற்றி உள்ள நிலையில், கனடா தூதர்கள் 6 பேரை வெளியேற்ற இந்தியா உத்தரவிட்டுள்ளது. 

இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையால் பயங்கரவாதி என கடந்த 2020-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார். இந்நிலையில், காலிஸ்தான் உறுப்பினரான நிஜ்ஜார், சர்ரே நகரில் குருத்வாரா ஒன்றிற்கு வெளியே கடந்த ஆண்டு ஜூனில் சுட்டு கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தில் இந்தியாவுக்கு உள்ள தொடர்பு பற்றி நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளுக்கான சான்றுகள் தன்னிடம் உள்ளன என அந்நாட்டு அதிபர் ஜஸ்டின் ட்ருடோ கடந்த ஆண்டு கனடா நாடாளுமன்றத்தில் பேசும்போது குறிப்பிட்டார்.

இந்த குற்றச்சாட்டுகள் எல்லாவற்றையும் இந்தியா மறுத்தது. உள்நோக்கத்துடன் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன என கூறியதுடன், கனடாவில் பயங்கரவாதிகளுக்கும் மற்றும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கும் இடம் அளிக்கப்படுகிறது என கனடாவை இந்தியா குற்றம்சாட்டியது. இதனை தொடர்ந்து, இந்தியா மற்றும் கனடா இடையேயான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டது. 

இந்நிலையில், கனடாவில் இந்திய அரசின் வன்முறை பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்திய தூதர்கள் பணியாற்றினர் என்பதற்கான சான்றுகளை கனடா போலீசார் சேகரித்து உள்ளனர் என கனடா குற்றச்சாட்டை தெரிவித்தது.

இதற்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்ததுடன், கனடாவின் தூதர் ஸ்டூவர்ட் வீலருக்கு இன்று சம்மன் அனுப்பி, அந்நாட்டிலுள்ள இந்திய தூதர் மற்றும் பிற தூதரக அதிகாரிகள் மீது அடிப்படையற்ற வகையில் குற்றச்சாட்டுகளை சுமத்துவது என்பது முற்றிலும் ஏற்று கொள்ள முடியாதது என தெரிவித்தது. இந்நிலையில், கனடாவில் உள்ள இந்திய தூதர்கள் 6 பேரை அந்நாட்டு அரசு வெளியேற்றி உள்ளது. 

இதற்கு பதிலடியாக கனடா தூதர்கள் 6 பேரை வெளியேற்ற இந்தியா உத்தரவிட்டுள்ளது. கனடாவின் தூதர், துணை தூதர் உள்ளிட்ட 6 பேரை வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) இரவு 11.59 மணிக்குள் அல்லது அதற்கு முன் இந்தியாவில் இருந்து வெளியேறும்படி அதுபற்றிய அறிவிப்பு ஒன்றில் தெரிவித்து உள்ளது.

இதன்படி, ஸ்டூவர்ட் ராஸ் வீலர், பேட்ரிக் ஹெபர்ட், மேரி கேத்தரின் ஜாலி, இயான் ராஸ் டேவிட் டிரைட்ஸ், ஆடம் ஜேம்ஸ் சுப்கா, பவுலா ஆர்ஜுவலா ஆகிய 6 பேரையும் வெளியேறும்படி மத்திய வெளி விவகார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு தெரிவிக்கின்றது. இதனால் கனடா மற்றும் இந்தியா இடையே தூதரக அளவில் மோதல் போக்கு தீவிரமடைந்து உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital



New Shape Tailors





Thoothukudi Business Directory