» செய்திகள் - விளையாட்டு » உலகம்
தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை : இலங்கை நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 4, அக்டோபர் 2024 12:44:18 PM (IST)
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 37 பேரை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகை, மயிலாடுதுறை துறைமுகங்களில் இருந்து 3 விசைப்படகுகளில் கடந்த மாதம் 21-ம் தேதி 37 பேர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிறைபிடித்தனர்.
மேலும் மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இலங்கைக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகளை வலியுறுத்தினார்.
இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட மயிலாடுதுறை மீனவர்கள் 37 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மீனவர்கள் பயன்படுத்திய 3 விசைப்படகுகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள் இந்திய துணை தூதரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதனால் மீனவர்கள் அனைவரும் விரைவில் தமிழகம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.