» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தான் பிரதமராக ஷபாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு
திங்கள் 4, மார்ச் 2024 8:31:34 AM (IST)
பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு மற்றும் பதற்றத்துக்கு மத்தியில் கடந்த மாதம் 8-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் 265 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், ஊழல் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீப் இ இன்சாப் கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சைகள் 93 இடங்களில் வெற்றி பெற்றனர்.
3 முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி 75 இடங்களில் வென்றது. அதே போல் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் சர்தாரி பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களை கைப்பற்றியது. எஞ்சிய இடங்களில் சிறிய கட்சிகள் வெற்றி பெற்றன.
எனினும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை எந்தவொரு கட்சிக்கும் கிடைக்காததால் குழப்பம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து கூட்டணி அரசை அமைக்க முடிவு செய்யப்பட்டது.இருப்பினும் பிரதமர் வேட்பாளர் யார் என்பது உள்ளிட்ட விவகாரங்களில் இருகட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதால் கூட்டணியை உறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.
பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு கருத்துவேறுபாடுகள் களையப்பட்டு இரு கட்சிகளும் சுமுக முடிவை எட்டின. அதன்படி பிரதமர் வேட்பாளராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ஷபாஸ் ஷெரீப் முன்னிறுத்தப்பட்டார்.அதே வேளையில் எதிர்க்கட்சி தரப்பில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீப் இ இன்சாப் கட்சியை சேர்ந்த உமர் அயூப் கான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக அந்த நாட்டு நாடாளுமன்றம் நேற்று கூடியது. பிரதமரை தேர்வு செய்ய நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 336 உறுப்பினர்களில் 201 பேர் ஷபாஸ் ஷெரீப்புக்கு ஆதரவாக வாக்களித்தனர். உமர் அயூப் கானுக்கு 92 வாக்குகள் கிடைத்தன. இதன் மூலம் ஷபாஸ் ஷெரீப் 2-வது முறையாக பாகிஸ்தான் பிரதமராக தேர்வானார்.
அவர் இன்று (திங்கட்கிழமை) இஸ்லாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் பாகிஸ்தானின் 33-வது பிரதமராக பதவியேற்கிறார். நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் இம்ரான்கானின் அரசு கலைக்கப்பட்ட பிறகு ஏப்ரல் 2022 முதல் ஆகஸ்டு 2023 வரை கூட்டணி அரசாங்கத்தின் பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.