» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நீட் குளறுபடி: யுபிஎஸ்சி-யை பார்த்து என்டிஏ பாடம் கற்க வேண்டும் - உச்சநீதிமன்றம் அறிவுரை!
செவ்வாய் 2, ஜூன் 2026 11:25:12 AM (IST)
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்தது.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்பி சுதாகர் சிங் மற்றும் பலர் சார்பில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சத்யம் சிங் ராஜ்புத், "மனுதாரர்கள் ஒரே ஒரு கோரிக்கையை மட்டுமே முன்வைத்துள்ளனர். வரும் ஜூன் 21-ஆம் தேதி நடத்தப்படவிருக்கும் நீட் மறுதேர்வை கணினிவழியில் நடத்த உத்தரவிட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை" என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், "இதேபோன்று ஏற்கனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதோடு, தேர்வு குளறுபடிகள் காரணமாக, இத்தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஏற்கனவே ஏராளமான பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்து, மீண்டும் நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
என்டிஏ மீதுள்ள தற்போதைய அழுத்தத்தை மனுதாரரின் வழக்கறிஞர் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, நீட் மறுதேர்வு கணினிவழியில் நடத்தப்படுமா என்ற கேள்விக்கே இடமில்லை" என்று குறிப்பிட்டு, மனு மீதான விசாரணையை ஜூலை 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
முன்னதாக, நீட் மறுதேர்வு அறிவிப்பை அண்மையில் வெளியிட்ட மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "நீட் தேர்வில் தொடர் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கும் நோக்கில், அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு கணினிவழியில் நடத்தப்படும்" என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
என்டிஏ பாடம் கற்க வேண்டும்: நீதிபதிகள் அறிவுரை
மேலும், நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், நீட் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமைக்குப் பதிலாக வலுவான, தன்னாட்சிமிக்க அமைப்பை ஏற்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த மனுக்களை அண்மையில் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அலோக் அராதே ஆகியோர் அடங்கிய அமர்வு, வினாத்தாள் கசிவு குறித்து கவலை தெரிவித்தது.
மேலும், மத்திய அரசுப் பணிகள் தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) நடத்தப்படும் தேர்வுகளின்போது, வினாத்தாள் கசிவு போன்ற நிலைமை ஏற்பட்டதில்லை. எனவே, பிற உயர் அமைப்புகளிடம் இருந்து தேசிய தேர்வு முகமை (என்டிஏ) பாடம் கற்பது அவசியம் என்று குறிப்பிட்டு, இவ்விவகாரம் தொடர்பாக 6 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை பெற நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு ஆண்டு நீட் தேர்வு கடந்த 3-ஆம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 22 லட்சம் பேர் தேர்வெழுதினர். இந்நிலையில், நீட் வினாத்தாளில் இருந்த அதே கேள்விகளைக் கொண்ட மாதிரி வினாத்தாள், ராஜஸ்தானில் முன்கூட்டியே வெளியானதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. முதல்கட்ட விசாரணையில் இந்த மாதிரி வினாத்தாள் வாட்ஸ்ஆப், டெலிகிராம் மூலம் பல்வேறு மாநிலங்களில் பரவியிருப்பது கண்டறியப்பட்டதால், நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்: மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 12:05:48 PM (IST)

லக்னோ அனிமேஷன் பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: மாணவர்கள் உட்பட 15 பேர் பலி!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:44:03 AM (IST)

இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயிலுக்கு ரயில்வே வாரியம் அதிகாரப்பூர்வ ஒப்புதல்!
திங்கள் 22, ஜூன் 2026 5:14:00 PM (IST)

நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முயற்சி : உத்தரப்பிரதேசம், பீகாரில் 10 பேர் கைது
திங்கள் 22, ஜூன் 2026 11:28:42 AM (IST)

தமிழக முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து!
திங்கள் 22, ஜூன் 2026 10:54:12 AM (IST)

உடல் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் 16 வகை கூட்டு மருந்துகளுக்குத் தடை: மத்திய அரசு அதிரடி!
ஞாயிறு 21, ஜூன் 2026 11:19:02 AM (IST)








