» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வடமாநில எம்.பி.க்களுக்கு ஏன் ஆங்கிலம் பேச தெரிவதில்லை? கலாநிதி வீராசாமி கேள்வி!

செவ்வாய் 25, மார்ச் 2025 12:01:17 PM (IST)

இந்தியா முழுவதும் 3 மொழி கொள்கையை அமல்படுத்தியதாக மத்திய அரசு கூறுகிறது. அப்படி இருக்க வடமாநிலங்ககளில் இருந்து வரும் பெரும்பாலான எம்.பி.க்களுக்கு ஏன் ஆங்கிலம் பேச தெரிவதில்லை என திமுக எம்.பி.கலாநிதி வீராசாமி கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக மக்களவையில் பேசிய கலாநிதி வீராசாமி, "நாடு முழுவதும் உள்ள வறுமையின் நிலையை நீங்கள் கணக்கிட்டு பார்த்தால் தென்னிந்திய மாநிலங்களின் வறுமை குறியீடு 0.5 முதல் 2% வரை தான் உள்ளது. தென்னிந்திய மாநிலங்களின் பல ஆண்டுகால முயற்சியினால் வறுமை ஒழிக்கப்ட்டுள்ளது.

வட இந்திய மாநிலங்களில் குறிப்பாக பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் வறுமை குறியீடு 9 -10% ஆகவும் பீகாரில் 20% ஆகவும் உத்தரபிரதேசத்தில் 15 -20% ஆகவும் உள்ளது. தமிழ்நாட்டின் கடந்த 50 ஆண்டுகளை எடுத்து பாருங்கள். 1967 பேரறிஞர் அண்ணா ஆட்சியில் இருந்து ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியும் எல்லோருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டின்படி தான் செயல்பட்டு வருகிறது. நாங்கள் வறுமை என்று பேசுவது நீங்கள் சொல்வது போல வருடத்திற்கு ரூ.27,000 சம்பாதிப்பவர்கள் பற்றி அல்ல. வருடத்திற்கு ரூ.1 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மாதா மாதம் ரூ.1,000 வழங்குகிறோம்.

அரசுப்பள்ளியில் இருந்து கல்லூரிக்கு படிக்க செல்லும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்குகிறோம். இதனால் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்பவர்களின் விகிதம் (GER) 25%. ஆனால் தமிழ்நாட்டில் தற்போதைய GER விகிதம் 52%.

10 ஆண்டுகளில் ரூ. 8 லட்சம் கோடி வரி செலுத்தியுள்ளது தமிழ்நாடு, ஆனால் எங்களுக்கு திரும்ப கிடைத்தது ரூ. 2.4 லட்சம் கோடிதான். தமிழ்நாட்டில் பேரிடர் ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் போது கூட மத்திய அரசு பேரிடர் நிதி வழங்குவதில்லை. மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய தேசிய கல்விக்கொள்கையில் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் ரூ.2,157 கோடி கல்வி நிதியை வழங்குவோம் என்று மத்திய அரசு மிரட்டுகிறது.

எங்களுக்கு அந்த ரூ.2,157 கோடி வேண்டாம் என்றும் ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தால் கூட மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று எங்களது முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் 3 மொழி கொள்கையை அமல்படுத்தியதாக மத்திய அரசு கூறுகிறது. அப்படி இருக்க வடமாநிலங்ககளில் இருந்து வரும் பெரும்பாலான எம்.பி.க்களுக்கு ஏன் ஆங்கிலம் பேச தெரிவதில்லை. வடஇந்தியாவில் இருக்கும் மக்களுக்கு இந்தியை தவிர வேறு ஏதேனும் மொழி பேச தெரியுமா?

அவர்கள் 3 மொழியை கற்பதாக சொல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இந்தியை தவிர வேறு எந்த மொழியும் தெரியவில்லை. ஆனால் தென்னிந்திய மக்கள் 3 மொழிகளை கற்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். இருமொழி கொள்கை தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளது. சுதந்திரம் அடையும்போது இந்தியாவின் ஏழ்மையான 3 ஆவது மாநிலத்தில் இருந்து தற்போது 2 ஆவது பணக்கார மாநிலமாக உயர்ந்துள்ளோம்" என்று தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education




New Shape Tailors



Thoothukudi Business Directory