» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வணிக சிலிண்டர் விலை ரூ.14.50 குறைப்பு: வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!
வியாழன் 2, ஜனவரி 2025 8:48:20 AM (IST)
வணிக சிலிண்டர் விலை ரூ.14.50 குறைக்கப்பட்டு உள்ளது. வீட்டு உபயோக சிலிண்டரில் எந்த விலை மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது
இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை நாடு முழுவதும் வினியோகம் செய்து வருகின்றன.
இந்த சிலிண்டர்களின் விலைகள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலையை நிர்ணயித்து வருகிறது. இதில் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலையை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது.
சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட வணிக கியாஸ் சிலிண்டர் கடந்த நவம்பர் மாதம் ரூ.61.50 உயர்ந்து ரூ.1,964.50-க்கும், கடந்த மாதம் ரூ.16 உயர்ந்து ரூ.1,980.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று வணிக சிலிண்டர் விலையை ரூ.14.50-க்கு குறைத்து ரூ.1,966-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த புதிய விலை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இதற்கான அறிவிப்பு முறையாக வெளியிடப்பட்டு உள்ளது. வணிகர்களுக்கு புத்தாண்டில் பரிசாக இந்த விலை குறைப்பு இருக்கும். ஆனால் வீட்டு உபயோக சிலிண்டரில் எந்த விலை மாற்றமும் இன்றி ரூ 818.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறினர்.