» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு: மாநில அரசிடம் அறிக்கை கேட்ட மத்திய அரசு!
வெள்ளி 20, செப்டம்பர் 2024 5:37:05 PM (IST)
திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் மாநில அரசிடம் அறிக்கை கேட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாட்டு கொழுப்பு கலப்பு தொடர்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பேசினேன். தற்போதைய நிலை குறித்து அறிக்கை கேட்டுள்ளேன். அறிக்கை ஆய்வு செய்யப்பட்டு தவறு செய்தவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச்செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கு பிறகு, விரிவான தகவல்களுடன் அறிக்கை அளிக்கும்படி தேவஸ்தான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
லட்டு சர்ச்சை தொடர்பாக திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் அளித்த பேட்டி: திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஷியாமளா ராவ் கூறியதாவது: திருப்பதி லட்டுவின் பிரசாதம் தரம் குறைந்தது குறித்து முதல்வரிடம் புகார் அளித்தோம். லட்டு மற்றும் நெய்யின் தரம் குறித்து பரிசோதனை செய்ய சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். அதில், அவர் சுமத்திய குற்றச்சாட்டு உண்மை என்பது தெரியவந்தது.
அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் பரிசோதனை செய்ததில் அதிர்ச்சிகரமான முடிவு தெரியவந்தது. விலங்குகளின் கொழுப்பு, மீன் ஆயில் கலந்துள்ளது தெரிந்தது. இதனையடுத்து நெய் சப்ளையர்களை அழைத்து எச்சரித்தோம். நெய்யை ஆய்வு செய்ய எங்களிடம் ஆய்வகம் இல்லை என்பதை பயன்படுத்தி தரமற்ற நெய் விநியோகம் செய்யப்பட்டது. ஏ.ஆர். டைரி புட்ஸ் மாதிரிகளை சோதனை செய்ததில் அவை தரமற்ற நெய்யை அவர்கள் விநியோகம் செய்தது தெரியவந்தது. இவ்வாறு அவர் கூறினார்.