» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகத் தயார்: பதில் அனுப்பினார் கேஜ்ரிவால்!
திங்கள் 4, மார்ச் 2024 10:30:21 AM (IST)
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையின் சம்மன்களை மீண்டும் மீண்டும் புறக்கணித்துவந்த அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், வரும் மார்ச் 12 ஆம் தேதிக்குப் பின்னர் அமலாக்கத் துறை விசாரணைக்கு வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் ஆஜராகத் தயார் எனத் தெரிவித்து பதில் அனுப்பியுள்ளார்.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையை கேஜ்ரிவால் அரசு அமல்படுத்தியது. இதன்படி 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அப்போதைய தலைமைச் செயலாளர், துணை நிலை ஆளுநரிடம் அறிக்கை அளித்தார். அதன்படி சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்கில் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சார்பில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் இதுவரை 8 சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன. இருந்தும் கேஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்நிலையில், அமலாகத் துறை சம்மன்களுக்கு வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் ஆஜராகத் தயாராக இருப்பதாகவும். மார்ச் 12க்குப் பின்னர் ஆஜராக அனுமதிக்கும்படியும் கேஜ்ரிவால் கோரிக்கை விடுத்து பதில் அனுப்பியுள்ளார். இதனை ஆம் ஆத்மி கட்சி வட்டாரம் உறுதி செய்துள்ளது.