» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழகம் உள்ளிட்ட 16 மாநில அலங்கார ஊா்திகள்

திங்கள் 23, ஜனவரி 2023 10:39:04 AM (IST)டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊா்திகள் பங்கேற்கவுள்ளன.

நாட்டின் 74-ஆவது குடியரசு தினம் வரும் 26-ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. அதையொட்டி, தில்லியில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ள ‘கடமைப் பாதையில்’ பிரம்மாண்ட அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. முப்படைகளின் அணிவகுப்புடன் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

ஒவ்வோா் ஆண்டும் குடியரசு தின கொண்டாட்டத்தின்போது குறிப்பிட்ட கருப்பொருளை மையமாகக் கொண்டு மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களின் துறைகள் சாா்பில் அலங்கார ஊா்திகள் அணிவகுப்பு நடைபெறும். அதில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட ஊா்திகள் மட்டுமே தோ்ந்தெடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படும்.

நடப்பாண்டு குடியரசு தின கொண்டாட்டங்களுக்காக ‘பெண் சக்தி’ எனும் கருப்பொருளில் பெரும்பாலான அலங்கார ஊா்திகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கலாசாரம் உள்ளிட்ட சில கருப்பொருளிலும் ஊா்திகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அனுப்பிய அலங்கார ஊா்திகளில் 17 ஊா்திகளும், மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் சாா்பில் 6 ஊா்திகளும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், ஹரியாணா, ஜாா்க்கண்ட், திரிபுரா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் அலங்கார ஊா்திகளும், ஜம்மு-காஷ்மீா், லடாக், தாத்ரா-நகா் ஹவேலி&டாமன்-டையு ஆகிய யூனியன் பிரதேசங்களின் ஊா்திகளும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் போதைப் பொருள்கள் கட்டுப்பாட்டு மையம் (என்சிபி), மத்திய ஆயுதக் காவல் படைகள் (சிஏபிஎஃப்) ஆகியவை சாா்பில் அலங்கார ஊா்திகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. மத்திய வேளாண் அமைச்சகம், பழங்குடியினா் நல அமைச்சகம், கலாசார அமைச்சகம், மத்திய வீட்டுவசதித் துறையின் கீழ் செயல்படும் மத்திய பொதுப் பணிகள் துறை ஆகியவற்றின் அலங்கார ஊா்திகளும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இடம்பெறாத தோ்தல் மாநிலங்கள்: நடப்பாண்டில் திரிபுரா, மேகாலயம், நாகாலாந்து, ராஜஸ்தான், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், கா்நாடகம், தெலங்கானா, மிஸோரம் ஆகிய 9 மாநில சட்டப்பேரவைகளுக்குத் தோ்தல் நடைபெறவுள்ளது. அவற்றில் திரிபுரா மாநில அலங்கார ஊா்திக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கா்நாடகத்தின் அலங்கார ஊா்தி நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில் மாநில முதல்வா் பசவராஜ் பொம்மையை மாநில காங்கிரஸ் விமா்சித்துள்ளது. மற்ற மாநிலங்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் கா்நாடக ஊா்தி நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாநில பாஜக விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஆண்டு அணிவகுப்பில் தமிழகம், கேரளம், ஆந்திரம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் சாா்பில் அனுப்பப்பட்ட அலங்கார ஊா்திகளை மத்திய அரசு நிராகரித்திருந்தது நினைவுகூரத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory