தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடலையூரில், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் உயிர்த்தியாகம் செய்த மற்றும் பங்கேற்ற தியாகிகளின் போராட்ட நினைவு தினம் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கடைப்பிடிக்கப்பட்டது.
1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில், மகாத்மா காந்தி "செய் அல்லது செத்து மடி" என்ற முழக்கத்துடன் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், 1942 ஆகஸ்ட் 22 அன்று கடலையூரில் வெயிலுகந்த முதலியார் தலைமையில் தியாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்:
வெள்ளையர் அரசால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சங்கரலிங்க முதலியார் சம்பவ இடத்திலேயே பலியானார்.மாடசாமி முதலியாருக்கு இடுப்பில் குண்டு பட்டு வெளிவந்தும். ராமசாமி முதலியாருக்கு கட்டை விரலில் குண்டு பட்டு துண்டாகியும் படுகாயமடைந்தனர். மேலும் ஆங்கிலேய அரசால் நெசவு நூல் மற்றும் பாவுகள் அடித்து நொறுக்கப்பட்டனபோராட்டத்தில் 34 தியாகிகள் இதில் பங்கேற்றனர்.
தியாகிகளின் வீரத்தைப் போற்றும் வகையில் கடலையூரில் அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபிக்குக் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இப்போராட்டத்தில் பங்கேற்ற தியாகி மாடசாமி முதலியாரின் பேரனும், ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியருமான வேல்முருகனுக்குப் பொன்னாடை போர்த்தி, புத்தகம் வழங்கி மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்து முருகன், முத்துச்செல்வன், நடராஜன், சமூக ஆர்வலர் மாரிச்சாமி உட்படப் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

