கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது, நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையிலான இடைவெளியில் தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்த நேபாளத்தைச் சேர்ந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நேபாள நாட்டைச் சேர்ந்த கணேஷ் கர் (35) என்பவர் இன்று மதியம் 14:57 மணியளவில் கோவில்பட்டி ரயில் நிலையத்தின் 2-வது நடைமேடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு நோக்கிச் செல்லும் திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் நடைமேடையை விட்டுப் புறப்பட்டபோது, ஓடும் ரயிலில் ஏற முயற்சித்துள்ளார்.

எதிர்பாராதவிதமாக அவர் கால் நழுவி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையிலான இடைவெளியில் விழுந்தார். இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக் கண்ட ரயில்வே பாதுகாப்புப் படை காவலர்கள் மற்றும் ரயில்வே காவல் துறை மகளிர் ஏட்டு மித்ரா ஸ்ரீ ஆகியோர் உடனடியாக அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவத்தால் அந்த ரயில் 4 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு, பின்னர் 15:01 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட கணேஷ் கர், சிகிச்சை பலனின்றி மாலை 4 மணியளவில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ரயில்வே காவல் உதவி ஆய்வாளர்சண்முகானந்த் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.