கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதிகளில், வீடுகளின் முன்பு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடிவீஸ்வரம் பகுதியில் வழக்கம் போல் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தியிருந்தனர். இந்நிலையில், நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், கண்மூடித்தனமாக வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் கார்களின் முன்பக்க மற்றும் பக்கவாட்டுக் கண்ணாடிகள் மற்றும் இருசக்கர வாகனங்களின் பாகங்கள் அடித்து நொறுக்கப்பட்டுச் சேதமடைந்துள்ளன. அதிகாலையில் எழுந்து பார்த்த வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்கள் சேதமடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி, நள்ளிரவு நேரத்தில் இச்செயலில் ஈடுபட்டுத் தப்பியோடிய மர்ம நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

குடியிருப்புப் பகுதியில் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.