தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், திருப்பணிசெட்டிகுளம் கிராமத்தில் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் சிறப்பு பார்வையாளராகக் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், தூய்மையான குடிநீர் விநியோகம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் (VB GRAM G), அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சிறுபாசன குளங்கள் புதுப்பித்தல், ஜல் ஜீவன் திட்டம் மற்றும் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

வீடு கட்டும் திட்டத்திற்கான நிதி உதவி ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 100 நாள் வேலைத்திட்டத்தின் வேலைநாட்கள் 125 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்வி பெற பெற்றோர் வழிகாட்ட வேண்டும். ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்களுக்கு 90% வேலைவாய்ப்பு உள்ளதால், அம்மாணவர்கள் அத்துறைப் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்யலாம்.

சுயஉதவிக் குழுக்கள் தங்களின் பொருளாதாரத்தை உயர்த்தப் புதிய தொழில்களைத் தொடங்க வேண்டும். கிராம மக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வு காண்பதே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 40-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகாரிகள் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

4 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியில் இருந்து ரூ. 1,70,000 கடனுதவிக் காசோலைகள். 2 விவசாயிகளுக்கு ‘அட்மா’ திட்டத்தில் 20 கிலோ உளுந்து விதை மற்றும் நெல் விதைப்புக் கருவி. 2 விவசாயிகளுக்கு ஆடிப்பட்ட விதைகள் மற்றும் 2 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள்.'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின்கீழ் 4 பயனாளிகளுக்கு முதலுதவி பெட்டி மற்றும் 2 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் பணிகள் நிறைவுற்ற ஜல் ஜீவன் திட்டத்தினை ஊராட்சியிடம் மாவட்ட ஆட்சியர் ஒப்படைத்தார்.

தூய்மை இயக்கம் 2.0 தொடர்பான தூய்மை உறுதிமொழி மற்றும் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஆட்சியர் தலைமை தாங்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர். பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த திட்டச் செயல்விளக்கக் கண்காட்சி அரங்கை ஆட்சியர் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் நா. சரவணன், மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், பயிற்சி ஆட்சியர் பாட்டில் கிருஷ்ணா பபுருவான், ஊராட்சி உதவி இயக்குநர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.