தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அம்பாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (43). ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவர், தற்போது விளாத்திகுளம் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுசீலா (38), கடந்த திங்கள்கிழமை காலையில் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார்.

பின்னர் மாலையில் அவர் வீடு திரும்பிய போது, வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 16 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்துச் சுசீலா அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். தகவல் அறிந்ததும் காவல் ஆய்வாளர் உலகநாதன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

மேலும், அப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.