சொத்து வரி, குடிநீர் கட்டணத்தைச் செலுத்த காலவரம்பை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்று சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணத்தை பொதுமக்கள் எளிதாகச் செலுத்தும் வகையில், தற்போது நடைமுறையில் உள்ள ஆறு மாத காலவரம்பை மாற்றி, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாநகரக்குழு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகரச் செயலாளர் எம்.எஸ். முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தூத்துக்குடி மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டுப் பல ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் பல ஊராட்சிகளை இணைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஊராட்சிகளில் கட்டணங்கள் குறைவாக உள்ள நிலையில், மாநகராட்சியுடன் இணைக்கப்படும்போது சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டு, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கூடுதல் நிதிச்சுமைக்கு உள்ளாவார்கள். குறிப்பாக, தூத்துக்குடி மாநகராட்சியில் ஏற்கனவே சொத்து வரி கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், ஆறு மாதங்களுக்கான ஒட்டுமொத்த தொகையை ஒரே நேரத்தில் செலுத்துவது மாத வருமானத்தை நம்பியுள்ள சாதாரண மக்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் முறையை மாற்றி, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்றி அமைக்க வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் சிறுகச் சிறுக வரியைச் செலுத்த வாய்ப்பு ஏற்படுவதுடன், மாநகராட்சிக்கும் சீரான வருவாய் கிடைக்கும். பொதுமக்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.