தூத்துக்குடியில் வங்கியாளர்களுக்கான மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இலக்குகளைச் சிறப்பாக எய்திய வங்கிகளுக்கு ஆட்சியர் விஷு மகாஜன் பாராட்டு தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் வங்கியாளர்களுக்கான மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடனுதவிகள் குறித்தும், தாட்கோ மூலம் மானியத்துடன் வழங்கப்படும் கடனுதவிகள் குறித்தும், மாவட்ட தொழில் மையம் சார்பில் ஏழு விதமான மானியத்துடன் வழங்கப்படும் கடனுதவிகள் குறித்தும், மாவட்ட சுய தொழில் உருவாக்கும் பயிற்சி மையத்தின் (RSETI) செயல்பாடுகள் குறித்தும், கடந்த ஆண்டை போல பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலக்கை சிறப்பாக எய்திட வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், அறிவுறுத்தினார்.

முன்னதாக, கல்வி, வேளாண் மற்றும் எரிசக்தி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடனுதவிகளை கடந்த ஆண்டு இலக்கினை முழுமையாக எய்தியமைக்காக வங்கியாளர்களைப் பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்நிகழ்வில், பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் மகேஷ்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விநாயகமூர்த்தி, மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் புனித ரெமேலா, நபார்டு வங்கி மேலாளர் சதாம் உசைன் மாவட்ட தொழில் மையம், இணை இயக்குநர் / பொது மேலாளர் ஸ்வர்ணலதா மற்றும் வங்கியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.