வங்கி ஊழியர்கள் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் இந்த கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு மறுத்துவருகிறது. 2½ ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த விவகாரம் நிதி அமைச்சகத்தில் நிலுவையில் உள்ளதாகவும், இதற்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண வேண்டி அரசுக்கு நோட்டீஸ் அளித்தும் காலதாமதம் செய்வதாகவும் ஊழியர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
இதுதவிர வங்கிகளில் எழுத்தர் மற்றும் துணை ஊழியர்களை போதுமான அளவில் பணியமர்த்த வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 11-ந்தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன.
அடுத்தக்கட்ட போராட்டமாக கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய அளவில் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை 3 நாட்கள் வேலைநிறுத்தம் செய்ய வங்கி ஊழியர்கள் சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்படாததால், நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
வேலைநிறுத்தம் நடக்கும் 3 நாட்களுக்கு முன்பாக நேற்றும், இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) 2 நாட்களும் விடுமுறை நாட்களாக இருப்பதால் 5 நாட்கள் வங்கிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டது. தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகள் செயல்படாமல் போனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கருதி ஞாயிற்றுக்கிழமை (அதாவது இன்று) வங்கிகள் செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
நாளை முதல் 3 நாட்கள் தொடர்ந்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால், பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல், காசோலை பரிவர்த்தனை மற்றும் ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தல் போன்ற முக்கிய சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால் அனைத்து வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல்களை அனுப்பி வருகிறது.
இணையதள சேவைகள், ஏ.டி.எம்.கள், மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே தொழில் நிறுவனங்கள், வர்த்தகப் பிரமுகர்கள், சிறு வியாபாரிகள் தங்களது அன்றாட பணம் மற்றும் காசோலை பரிமாற்றங்களை செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளதால் ஏ.டி.எம்.களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது.
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் அனைத்து வங்கிகளுக்கும் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
அதன்படி பொதுத்துறை வங்கி வாடிக்கையாளர்கள், வேலைநிறுத்தம் நடைபெறும் 3 நாட்களிலும் தங்களுடைய வங்கியின் ஏ.டி.எம். மட்டுமின்றி, மற்ற எந்த வங்கியின் ஏ.டி.எம்.களையும் கூடுதல் கட்டணமின்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.
பொதுவாக ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி, மாதத்திற்கு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் (5 முறைக்கு மேல்) ஏ.டி.எம்.களை பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், இந்த 3 நாட்களுக்கு அந்த மாதாந்திர இலவச வரம்பை தாண்டினாலும் எந்தக் கட்டணமும் விதிக்கப்படாது.
எனவே, அவசர பணத்தேவை உள்ளவர்கள் எந்த வங்கி ஏ.டி.எம்.களையும் கட்டண கவலையின்றி பயன்படுத்தலாம். கட்டணம் வசூலிக்க கூடாது என்று அறிவுறுத்தி இருப்பதால் பொதுமக்கள் தங்கள் தேவைக்கு ஏ.டி.எம். மையங்களை பயன்படுத்தலாம் என்று பொதுத்துறை வங்கிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

