தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மகாராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் பொக்லைன் எந்திர ஓட்டுநராகப் பணியாற்றி வருபவர் சுரேஷ். இவரது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 22) அவரது குழந்தைகளுக்குக் காதணி விழா நடைபெற்றது.

இவ்விழாவில் பங்கேற்பதற்காக அதே செங்கல் சூளையில் கூலித் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்த மாணிக்கம் (55), சங்கிலி (43), வேல்முருகன் (37), ராஜேஷ் (35), சக்திவேல் (40), பாவாடை (51), சீதாராமன் (20), சுப்பிரமணி (45), ராமலிங்கம் (38) மற்றும் ராமர் (42) ஆகிய 10 பேரும் நேற்று காலை மகாராஜபுரத்திலிருந்து ஒரு வேனில் புறப்பட்டுச் சென்றனர். விழா மற்றும் மதிய விருந்தை முடித்துக்கொண்டு, மாலையில் அவர்கள் 10 பேரும் அதே வேனில் திருக்காட்டுப்பள்ளி நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். வேனை ராஜேஷ் ஓட்டிச் சென்றார்.

நேற்று மாலை 4 மணி அளவில் திருச்சி மாவட்டம் துறையூர் - முசிறி சாலையில் ஜெம்புநாதபுரத்தை அடுத்த கோதூர்பட்டி - மேல கொத்தம்பட்டி கட் ரோடு அருகே வேன் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநர் ராஜேஷின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரத்தில் இருந்த வேப்பமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன்பகுதி முற்றிலுமாக நொறுங்கியது.

இவ்விபத்தில் வேன் ஓட்டுநர் ராஜேஷ் மற்றும் தொழிலாளர்கள் மாணிக்கம், சங்கிலி, வேல்முருகன், பாவாடை ஆகிய 5 பேர் இடுபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கிச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மற்ற 5 பேரையும் அவ்வழியாகச் சென்றவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சக்திவேல், சீதாராமன், சுப்பிரமணி ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இதனால் இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. படுகாயமடைந்த ராமலிங்கம், ராமர் ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் உயிரிழந்த சுப்பிரமணி, மாணிக்கம், சக்திவேல், ராஜேஷ், வேல்முருகன் ஆகிய 5 பேரும் மகாராஜபுரத்தையும், சங்கிலி தஞ்சை மாவட்டம் கீழ சாத்தனூரையும், பாவாடை மற்றும் சீதாராமன் ஆகியோர் விழுப்புரம் மாவட்டம் அகரம் சித்தாம்பூரையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

விபத்து குறித்துத் தகவலறிந்த திருச்சி மாவட்ட எஸ்.பி. (பொறுப்பு) ரகுபதி, முசிறி டி.எஸ்.பி. சங்கர், தா.பேட்டை காவல் ஆய்வாளர் முத்தையன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர். விபத்தில் சிக்கிய வேன் பொக்லைன் எந்திரம் உதவியுடன் மீட்கப்பட்டது.

முசிறி அரசு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 4-க்கும் மேற்பட்ட உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்யும் வசதி இல்லாததால், உயிரிழந்த 8 பேரின் உடல்களும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கு இன்று (திங்கள்கிழமை, நவம்பர் 23) பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

விபத்து குறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதணி விழாவிற்குச் சென்று திரும்பிய தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.