கோவையில் தடைசெய்யப்பட்ட குட்கா போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற காரின் மேற்கூரையில் தொங்கியபடி 40 கி.மீ. தூரம் பயணித்து, கடத்தல்காரர்களைப் பிடிக்கக் காரணமாக இருந்த ஏட்டு வேல்முருகனை முதலமைச்சர் விஜய் நேரில் அழைத்துத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாகக் கடந்த 27-ஆம் தேதி காவல்துறையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் கணியூர் சுங்கச்சாவடி அருகே சார்பு ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த சந்தேகத்திற்குரிய கார் ஒன்றை நிறுத்துமாறு காவல்துறையினர் சைகை காட்டினர். ஆனால், காரை ஓட்டி வந்த நபர் வாகனத்தை நிறுத்தாமல் காவல்துறையினர் மீது மோதும் வகையில் ஆபத்தான முறையில் இயக்கித் தப்ப முயன்றார்.
அப்போது கோவில்பாளையம் காவல் நிலைய ஏட்டு வேல்முருகன், சமயோசிதமாகச் செயல்பட்டு அந்த காரின் மேற்கூரையின் மீது தாவி ஏறினார். இருப்பினும் காரை நிறுத்தாமல் கடத்தல்காரர்கள் தொடர்ந்து அதிவேகமாக இயக்கிச் சென்றனர். ஏட்டு வேல்முருகன் காரின் மேல்பகுதியில் படுத்தபடியே ஆபத்தான முறையில் பயணித்த நிலையில், மற்ற காவல்துறையினரும் ரோந்து வாகனத்தில் காரைப் பின்தொடர்ந்து சென்று, பிற காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இறுதியில் குறிப்பிட்ட இடத்தில் காரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர், அதிலிருந்த குட்கா பொருட்களைப் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட 3 பேரைக் கைது செய்தனர். விளாங்குறிச்சியில் இருந்து அவிநாசி வரை சுமார் 40 கி.மீ. தூரம் ஏட்டு வேல்முருகன் தனது உயிரைப் பணயம் வைத்துச் செயல்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் பாராட்டையும் பெற்றது.
காவல் ஏட்டு வேல்முருகனின் இந்தத் துணிச்சலான செயலைப் பாராட்டும் வகையில், அவரைச் தலைமைச் செயலகத்திற்கு நேரில் வரவழைத்து முதலமைச்சர் விஜய் பொன்னாடை போர்த்தி, பாராட்டிப் பரிசுகளை வழங்கினார்.
மேலும், இது போன்ற ஆபத்தான பணிகளின் போது கவனமாகவும், பாதுகாப்புடனும் செயல்பட வேண்டும் என ஏட்டு வேல்முருகனுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார். இந்நிகழ்வின் போது காவல் துறை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் உடனிருந்தார்.

