உலக இருதய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இருதய நோய் தடுப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வுப் பேரணியை மருத்துவக் கல்லூரி முதல்வர் எபனேசர் ஜோயல் குமார் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

பேரணி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று மீண்டும் மருத்துவக் கல்லூரியை வந்தடைந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட செவிலிய மாணவிகள் மற்றும் மருத்துவ மாணவர்கள் இருதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர்.

அதனைத் தொடர்ந்து இருதய மருத்துவத் துறை சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மூத்த இருதய மருத்துவ நிபுணர் பாலமுருகன் வரவேற்புரையாற்றினார். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதால் ஏற்படும் இருதய நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்துச் செவிலிய மாணவிகள் நாடகம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிறைவாக மருத்துவர் வெங்கடேஷ் நன்றியுரையாற்றினார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இருதய சிகிச்சை பிரிவில் ஆண்டிற்கு 10,000 முதல் 12,000 வரையிலான இருதயப் புறநோயாளிகள் இம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுப் பயனடைகின்றனர். மாதந்தோறும் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாரடைப்பு நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு குணமடைந்து திரும்புகின்றனர்.

தினசரி 100-க்கும் மேற்பட்டோருக்கு இருதய ஸ்கேன் (Echocardiogram) பரிசோதனை செய்யப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் அதிநவீன இருதய நோய் சிகிச்சை ஆய்வகத்தின் மூலம் இதுவரை சுமார் 6,000 மாரடைப்பு நோயாளிகளுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி வித் ஸ்டென்ட் (Angioplasty with stent) சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது.

சீரற்ற இருதயத் துடிப்பினால் இருதய செயலிழப்பு ஏற்பட்ட 25 நோயாளிகளுக்கு நிரந்தர 'பேஸ்மேக்கர்' கருவி பொருத்தப்பட்டு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் சுமார் ₹3 லட்சம் வரை செலவாகும் இத்தகைய உயர் சிகிச்சை முறைகள் அனைத்தும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இம் மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

இச் சிறப்பான சேவைகளுக்கு நிலைய மருத்துவ அதிகாரி சைலஸ் ஜெயமணி, கண்காணிப்பாளர் பத்மநாபன், மருத்துவத் துறை பேராசிரியர் ராஜவேல், மருத்துவர்கள் பரத், பலராம கிருஷ்ணன், சிவகுமார் மற்றும் விஷ்ணுதாஸ் ஆகியோர் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர்.

Heartuty.jpg

பொதுமக்கள் இருதய நோய்கள் பற்றிய விழிப்புணர்வையும் புரிதலையும் பெற்று, சரியான நேரத்தில் அரசு மருத்துவமனையின் இலவச உயர் சிகிச்சை சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மூத்த மருத்துவர் பாலமுருகன் கேட்டுக்கொண்டார்.