தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல் மின் நிலையத்தின் முதல் அலகில் பராமரிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் உடன்குடியில் தலா 660 மெகாவாட் திறன் கொண்ட இரு அலகுகளுடன் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் அலகில் கடந்த மார்ச் 13-ஆம் தேதி மின் உற்பத்தி தொடங்கப்பட்டு நடைபெற்று வந்த நிலையில், பராமரிப்பு காரணங்களுக்காக கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தற்போது பராமரிப்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததை அடுத்து, நேற்று மீண்டும் முதல் அலகில் மின் உற்பத்தி தொடங்கியது. இந்த உற்பத்தி படிப்படியாக உயர்த்தப்பட்டு முழு திறனான 660 மெகாவாட்டை விரைவில் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது அலகு விரைவில் இயக்கம்:
இரண்டாவது அலகில் மின் உற்பத்தியைத் தொடங்குவதற்கான சோதனை ஓட்டம் மற்றும் கூலிங் டவர் சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. அதனடிப்படையில், விரைவில் 2-வது அலகிலும் மின் உற்பத்தி முறைப்படி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

