திருநெல்வேலி மாவட்டக் காவல்துறையின் போதைப்பொருட்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை மூலம் ஒரே நாளில் இரண்டு வழக்குகளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆகஸ்ட் 25 அன்று அம்பாசமுத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அம்பாசமுத்திரம் ஆற்றுப்பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த வெள்ளாங்குழியைச் சேர்ந்த செந்தில் (42), ஆலங்குளம் நெட்டூரைச் சேர்ந்த கருப்பசாமி (35), திருச்சியைச் சேர்ந்த சூர்யா (20) மற்றும் ஏ.மருதப்பபுரத்தைச் சேர்ந்த செல்வம் (20) ஆகிய 4 பேரைக் காவல்துறையினர் சோதனையிட்டனர்.
அப்போது அவர்களிடம் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
ராதாபுரத்தில் 6 கிலோ கஞ்சா:
இதேபோல் ராதாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கால்கரை அருகே நின்றுகொண்டிருந்த கால்கரையைச் சேர்ந்த முருகன் (24), தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்ணு (22) மற்றும் கணேஷ் அரவிந்த் (21) ஆகிய 3 பேரைக் காவல்துறையினர் சோதனையிட்டனர்.
அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து ராதாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டக் காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால் ஒரே நாளில் அம்பாசமுத்திரம் மற்றும் ராதாபுரம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 28 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, கைதான 7 பேரும் நீதிமன்ற உத்தரவின்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மாவட்டத்திற்குள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் தடுக்கக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனக் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

