சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 23 பேர் வேனில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்றுவிட்டு மீண்டும் சேலம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். வேனை தாரமங்கலத்தைச் சேர்ந்த ராமசுந்தரம் (39) என்பவர் ஓட்டியுள்ளார்.

வேன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் பைபாஸ் ரோடு ஜோதி நகர் ஜங்ஷன் அருகே வந்தபோது, முன்னாள் சென்றுகொண்டிருந்த ட்ரெய்லர் லாரி யூ-டர்ன் போட்டு திருப்ப முயன்றுள்ளது. அப்போது பின்னால் வந்த வேன் லாரியின் பின்பகுதியில் எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இவிபத்தில் வேனில் பயணம் செய்த சுமார் 10 பேருக்குச் சிறுசிறு காயங்கள் ஏற்பட்டன. அவர்களில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.

மற்ற காயமடைந்த நபர்களுக்குச் சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த உதவி ஆய்வாளர் செல்வம் தலைமையிலான காவல்துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர், விபத்து குறித்து லாரி டிரைவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த அருமுககுமார் (47) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.