தூத்துக்குடி வ.உ.சி. கலைக் கல்லூரியில் இன்று நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 636 நபர்களுக்கு மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா, பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, 'தூத்துக்குடி வேலைவாய்ப்பு முகாம் - 2026' திட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து இம்முகாமை நடத்தின.
இம்முகாமில் 118 தனியார் நிறுவனங்களும், 7 திறன் பயிற்சி நிறுவனங்களும் என மொத்தம் 125 நிறுவனங்கள் பங்கெடுத்தன. வேலைவாய்ப்பு தேடி 1,176 ஆண்கள் மற்றும் 980 பெண்கள் என மொத்தம் 2,156 நபர்கள் முகாமில் கலந்துகொண்டனர். தீவிர நேர்காணலுக்குப் பின் 636 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான பணி நியமன ஆணைகள் உடனடியாக வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பேசுகையில், "இளைஞர்கள் இதுபோன்று நடத்தப்படும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களில் பெருமளவில் கலந்துகொண்டு தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் திருநெல்வேலி மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநர்சண்முகசுந்தர், மாவட்ட வேலைவாய்ப்பு மைய உதவி இயக்குநர் பேச்சியம்மாள், மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், வ.உ.சி. கலைக் கல்லூரி முதல்வர் வீரபாகு மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

