தூத்துக்குடி மாநகரின் முக்கியச் சந்திப்புகளில் உள்ள சிக்னல்களில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குழந்தைகளுடன் நின்று கொண்டு பிச்சை எடுப்பதையும், வாகனங்களை மறிப்பதையும் தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியருக்கும் சமூக நலத்துறைக்கும் 'மக்கள் மேம்பாட்டுக் கழகம்' சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகரின் பிரதான சந்திப்புகளான வி.வி.டி. சிக்னல், போல்பேட்டை ஏ.பி.சி.வி. டவர் சிக்னல் மற்றும் காய்கறி மார்க்கெட் சிக்னல் ஆகிய மூன்று முக்கியப் பகுதிகளில் சமீபகாலமாக வடமாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு குடும்பங்கள் பிச்சை எடுத்து வருகின்றன.

அவர்கள் குழந்தைகளைக் கையில் வைத்துக்கொண்டு பிச்சை எடுப்பதுடன், நவீன முறையில் சோப்புத் தண்ணீரைப் பயன்படுத்தி, வாகன ஓட்டிகளிடம் கேட்காமலேயே கார்களின் கண்ணாடிகளைச் சுத்தம் செய்வது போல் வழிமறித்துப் பணம் கேட்டு வற்புறுத்துவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

சிறுபிள்ளைகள் மற்றும் குழந்தைகளுடன் சாலையின் குறுக்கும் நெடுக்குமாக ஓடுவது, நோயாளிகளைப் போலக் கைகளில் கட்டுப் போட்டுக்கொண்டு ஊன்றுகோலுடன் செல்வது என வாகன ஓட்டிகள் மத்தியில் முகம் சுளிக்கும் வகையிலும், பெரும் விபத்துகளை ஏற்படுத்தும் வகையிலும் இச்செயல்கள் அமைந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே, இப்பிரச்சினையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி மற்றும் குழந்தைகள் நல அமைப்புகள் உடனடியாக தலையிட வேண்டும். பிச்சை எடுக்கும் கும்பல்களை உடனடியாக மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து அரவணைப்பு வழங்க வேண்டும் அல்லது அவர்களைச் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என 'மக்கள் மேம்பாட்டுக் கழகம்' சார்பில் வழக்கறிஞர் சுப. மாடசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.