தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மதுரையில் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தைத் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரங்களை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வழங்கித் தொடங்கி வைத்தார்.
அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஜூன் 22, 2026 முதல் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் இப் பிரம்மாண்ட திட்டத்தினை, மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இத் திட்டத்திற்காக அரசு சார்பில் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விழாவில், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் மற்றும் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் கு. சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரங்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்ததாவது: "தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜூன் 22 முதல் செப்டம்பர் 26 வரை தூத்துக்குடி அரசு மருத்துவமனை - 1,779 குழந்தைகள், கோவில்பட்டி அரசு மருத்துவமனை - 999 குழந்தைகள், திருச்செந்தூர் அரசு மருத்துவமனை - 424 குழந்தைகள் என மொத்தம் 3,202 குழந்தைகளுக்கு இத் திட்டத்தின் கீழ் தங்க மோதிரங்கள் வழங்கப்படவுள்ளன.
இதன் முதற்கட்டமாக இன்றைய தினம் தூத்துக்குடி அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் 50 குழந்தைகளுக்கும், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 35 குழந்தைகளுக்கும், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் 26 குழந்தைகளுக்கும் என மொத்தம் 111 குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள குழந்தைகளுக்குக் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், நாள்தோறும் காலை 25 குழந்தைகளுக்கும், மதியம் 25 குழந்தைகளுக்கும் எனப் பிரித்து வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராம சுகாதாரச் செவிலியர்கள் மூலம் பயனாளிகளுக்கு இதற்கான அழைப்பிதழ்கள் வழங்கப்படும். அழைப்பிதழ் பெற்றுக்கொண்ட தாய்மார்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் வந்து தங்க மோதிரத்தைப் பெற்றுச் செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி சார் ஆட்சியர் விவேக் யாதவ், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. எபனேசர் ஜோயல் குமார், நலப்பணிகள் இணை இயக்குநர் மரு. பிரியதர்ஷினி, தூத்துக்குடி மாவட்ட சுகாதார அலுவலர் மரு. யாழினி, துணை முதல்வர் மரு. கலைவாணி, உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தாய்மார்கள் கலந்து கொண்டனர்.

