தூத்துக்குடி ராஜூ நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மகன் மாடசாமி (44). இவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணித் துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த மாதம் 29-ம் தேதி ஜார்ஜ் ரோடு கணேகஷ்புரம் பகுதியில் மாடசாமி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாகனத்தின் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானார். இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாடசாமி, சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

