தஞ்சாவூர் மாநகராட்சியில் ரூ.130 கோடி மதிப்பில் பல்நோக்கு வணிக வளாகம் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சியில் போல்பேட்டை பகுதியில் உள்ள பழைய பேருந்து நிலையத்தை ரூ.90 கோடி மதிப்பில் மறுமேம்படுத்தும் திட்டம் ஆகிய இரு முக்கிய நகர மேம்பாட்டுப் பணிகளைப் பொது-தனியார் கூட்டுமுறையில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரிக்கவும், நிதிநிலை தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு தகுந்த ஆலோசனைகளை வழங்கவும் ஆலோசகரைத் தேர்வு செய்யத் தமிழ்நாடு அரசின் திட்ட மேம்பாட்டு மானிய நிதியம் (TNDF) தற்போது டெண்டர் கோரியுள்ளது.
தேர்வு செய்யப்படும் ஆலோசகர், திட்டங்களை PPP முறையில் செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை வகுப்பதுடன், இத் திட்டத்தைக் கையாளுவதற்கான தகுதியான தனியார் நிறுவனத்தைத் தேர்வு செய்யும் நடவடிக்கைகளிலும் அரசுக்கு உதவுவார்.
இவ்விரு திட்டங்களுக்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் பரிவர்த்தனை ஆலோசனைப் பணிகளைச் செய்வதற்கான ஒப்பந்த மதிப்பு ரூ.50 லட்சம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பண வைப்புத் தொகையாக (EMD) ரூ.50,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த டெண்டர்களைச் சமர்ப்பிக்க வரும் அக்டோபர் 15-ஆம் தேதி காலை 11:00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அன்று பிற்பகல் 12:30 மணிக்குத் டெண்டர் கோரல்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போல்பேட்டை பழைய பேருந்து நிலையம் நவீனப்படுத்தப்படவுள்ளது தூத்துக்குடி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

