தூத்துக்குடியில் பழுதடைந்து கிடந்த மாநகராட்சி வழிகாட்டிப் பலகையை தவெக நிர்வாகிகள் சொந்தச் செலவில் சீரமைத்தனர்.

தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலையில் உள்ள திரு.வி.க. நகர் பிரதான பாதையில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த வழிகாட்டிப் பலகை கடந்த 6 மாதங்களுக்கும் மேலாகப் பழுதடைந்து கீழே விழுந்து கிடந்தது.

இந்தப் பலகையைச் சீரமைத்துத் தருமாறு அப்பகுதி பொதுமக்கள் சார்பில் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கைகள் வைக்கப்பட்டும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கீழே விழுந்து கிடந்த வழிகாட்டிப் பலகையைத் தமிழக வெற்றிக் கழகத்தின் 51-ஆவது வட்டச் செயலாளர் ரகு தலைமையில் நிர்வாகிகள் இன்று தங்களது சொந்தச் செலவில் மீண்டும் சீரமைத்துப் பொருத்தினார்கள்.

மாநகராட்சி நடவடிக்கை எடுக்காத நிலையிலும் முன்வந்து வழிகாட்டிப் பலகையைச் சீரமைத்த தவெக நிர்வாகிகளை அப்பகுதி பொதுமக்களும் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் பாராட்டினர்.