தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த இருசக்கர வாகன ஷோரூமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாயின.
தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் உள்ள ஒரு 3 மாடி வணிக வளாகத்தில் இருசக்கர வாகன விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் மேல் தளத்தில் இருசக்கர வாகனங்களுக்குக் கடன் வழங்கும் தனியார் வங்கி ஒன்றும் இயங்கி வருகிறது.
இன்று காலை 9 மணியளவில், தரைத்தளத்தில் உள்ள ஷோரூமில் திடீரென தீப்பிடித்து மடமடவென வணிக வளாகம் முழுவதும் பரவியது. அடர்ந்த புகைமூட்டம் எழுந்ததால் பாளையங்கோட்டை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீ விபத்து குறித்து தகவலறிந்ததும், தூத்துக்குடி சிப்காட், தெர்மல் நகர், ஸ்டெர்லைட், அனல் மின் நிலையம் மற்றும் புதிய துறைமுகம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன.
தூத்துக்குடி மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையில் 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடித் தீயைக் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஷோரூமில் இருந்த 30 புதிய இருசக்கர வாகனங்கள் மற்றும் பழுதுபார்ப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட 40 வாகனங்கள் முழுமையாகத் தீயில் எரிந்து நாசமாயின. ஷோரூமில் இருந்த கணினிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் எரிந்தன.
வங்கியில் ஆவணங்கள் எரிந்து சேதம்:
மேல் தளத்தில் உள்ள வங்கியில் இருந்த கணினிகள் மற்றும் இருசக்கர வாகனக் கடன் வழக்கம் தொடர்பான சுமார் 3,000 ஆவணங்கள் தீயில் கருகின. விபத்தில் சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் சேதமடைந்தன.

சம்பவ இடத்தை தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுகிர், சிப்காட் காவல் ஆய்வாளர் தனசேகரன் மற்றும் போலீசார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு எதுவும் ஏற்படவில்லை என்றும், வணிக வளாகத்தின் பின்புறம் இருந்த முட்புதர்களுக்கு யாரோ வைத்த தீ, ஷோரூமிற்குப் பரவியதே விபத்திற்குக் காரணம் என்றும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

