தூத்துக்குடி பொன்னகரத்தில் மளிகைக் கடை உரிமையாளரின் கூகுள் பே கணக்கிலிருந்து ரூ.20,000 அபகரிப்பு. ஓடிபி மற்றும் பின் நம்பர் இல்லாமல் பணத்தை அபேஸ் செய்த மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வரும் சைபர் கிரைம் போலீசார். தூத்துக்குடி:
தூத்துக்குடி பொன்னகரம் பகுதியைச் சேர்ந்த முத்துவேல் ராஜ் மகன் பாரத் (20). இவர் அதே பகுதியில் சொந்தமாக மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாரத்தின் 'கூகுள் பே' எண்ணிற்கு அறிமுகமில்லாத நபர் ஒருவரிடமிருந்து ரூ.10 ஆயிரம் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பாரத், அப்பணத்தை யார் அனுப்பியுள்ளார்கள் என்று அறிந்துகொள்வதற்காகத் தனது கூகுள் பே கணக்கை ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது வங்கிக் கணக்கிலிருந்து திடீரென ரூ.20 ஆயிரம் பணம் திருடப்பட்டது. இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த அவர், இச்சம்பவம் குறித்துத் தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையிடம் உடனடியாகப் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், மோசடியில் ஈடுபட்ட மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். வழக்கமாகப் பணப் பரிவர்த்தனைகளுக்குத் தேவைப்படும் ஒடிபி அல்லது பின் நம்பர் எதுவுமின்றி, ஒருவர் கணக்கிலிருந்து நூதன முறையில் பணம் அபேஸ் செய்யப்பட்ட இச்சம்பவம் சைபர் கிரைம் போலீசார் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

