தூத்துக்குடி மதுரை பைபாஸ் சாலையில் உள்ள லாரி நிறுத்தம் பகுதியில் லாரியில் சட்டவிரோத விற்பனைக்காகக் கஞ்சா வைத்திருந்த 2 பேரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை பைபாஸ் சாலையின் லாரி நிறுத்தம் அருகில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாகப் போலீசாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதா தலைமையிலான போலீசார் அங்கு அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது, லாரியில் சட்டவிரோதமாகக் கஞ்சா வைத்திருக்கக் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கஞ்சா வைத்திருந்த ஏரல் மாறமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜ் என்பவரின் மகன் பொன்செல்வம் (22) மற்றும் தூத்துக்குடி பண்டாரவிளை பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் அசோக்குமார் (28) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 2 கிலோ 800 கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.