தூத்துக்குடியில் அடுத்தடுத்து மூன்று பெண்களிடம் செல்போன்கள் மற்றும் கைப்பையுடன் பணத்தைப் பறித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சண்முககனி (63) என்பவர் நேற்று மாலை சாலையில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அவரது கையிலிருந்த செல்போனைப் பறித்துச் சென்றார். அதேநபர், கோமதி பாய் காலனியைச் சேர்ந்த வையனாச்சி (55) என்பவரிடமும் செல்போனைப் பறித்துத் தப்பினார்.

விளாத்திகுளத்தைச் சேர்ந்த சந்திரா (55) என்பவர் தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனையில் சிகிச்சையிலிருக்கும் தனது மகனைப் பார்த்துவிட்டு நடந்து சென்றபோது, அவரது கைப்பையைப் பறித்துச் சென்றார். அதில் ரூ.8,000 பணம் இருந்தது.

இச்சம்பவங்கள் குறித்துப் பாதிக்கப்பட்டவர்கள் வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர்.

அதில், தூத்துக்குடி அண்ணா நகர் 12-வது தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சக்தி கணேஷ் (25) என்பவரே இந்தத் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.