தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாதாந்திர ஆய்வு மற்றும் மீளாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24) நடைபெற்றது.

2026-27 ஆம் ஆண்டிற்கான திட்டம் சார்ந்த செயல்பாடுகள் குறித்து நடைபெற்ற இக்கூட்டத்தில், இடைநிற்றல் வாய்ப்பு உள்ள மாணவர்களின் தற்போதைய நிலை, மாநில அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதத்தின் நிலை ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், 14 வயது முடிந்த பெண் குழந்தைகளுக்குக் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு நடவடிக்கையாக HPV மருந்து வழங்கப்பட்ட தற்போதைய நிலை, SLAS குறைதீர் கற்பித்தல் பணிகள், பள்ளி மேலாண்மைக் குழு (SMC) செயல்பாடுகள் மற்றும் பள்ளிகளில் தேவையான தூய்மைப் பணியாளர்கள் பட்டியல், சம்பள விவரங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2025-26 ஆம் கல்வியாண்டில் +2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரையும் உயர்கல்வியில் சேர்க்கும் நோக்கில் கடந்த மே மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 'கனவு கட்டுப்பாட்டு அறை' தொடங்கப்பட்டு, சுமார் 30 பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், 207 பள்ளிகளில் +2 தேர்வு எழுதிய 19,095 மாணவர்களில் 18,721 மாணவர்கள் (98.04%) உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். இதில் 105 பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவர்களும் 100 சதவீதம் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்.

இதையடுத்து, கனவு கட்டுப்பாட்டு அறை பணியாளர்கள் மற்றும் 100% மொத்த சேர்க்கை விகிதம் (GER) இலக்கை அடைந்த பள்ளிகளைக் கௌரவிக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். மேலும், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து நீட் (NEET), ஜே.இ.இ. (JEE), ஐ.எம்.யூ. (IMU), நாட்டா (NATA) உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான 92 பயிற்சிப் புத்தகங்களை அரசு மாதிரிப் பள்ளிகளின் மாணவர்களுக்கு ஆட்சியர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, மாவட்டக் கல்வி அலுவலர்கள் முனியசாமி (தூத்துக்குடி – இடைநிலை), முருகேசன் (தூத்துக்குடி – தொடக்கக் கல்வி), சீதாமகேஷ்வரி (கோவில்பட்டி – இடைநிலை), செல்வி (கோவில்பட்டி – தொடக்கக் கல்வி), சிதம்பரநாதன் (தனியார் பள்ளிகள்), வானரமுட்டி மாவட்டக் கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் ஜெபா, மாவட்டத் திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி) முருகன், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.