தூத்துக்குடி எஸ்.ஆர்.எம். ஹோட்டலில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 'திறன் - 26' என்ற சிறப்புத் திறன் மேம்பாட்டு மாநாடு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.

தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.விஜயகுமார் காணொளி வாயிலாக இக்கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் கவிதா ராமு, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய இயக்குநர் டாக்டர் சி.பழனி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்குச் சிறப்புரையாற்றினர்.

மாநாட்டில் உற்பத்தி மற்றும் வாகனத் துறை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கப்பல் தளவாடக் கட்டுமானம் மற்றும் விண்வெளித் தளவாடக் கட்டுமானம் ஆகிய 4 முக்கியத் துறை சார்ந்த தொழில் திறன்களை, கல்வி வாயிலாக மாணவர்களுக்கு எவ்வாறு கொண்டு சேர்ப்பது என்பது குறித்துத் தொழில்துறை வல்லுநர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.

மாநாட்டிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் கூறியதாவது: "தூத்துக்குடி மாவட்டத்தை நோக்கி அதிக அளவிலான தொழிற்சாலைகள் வருகை தருகின்றன. அடுத்த 5 ஆண்டுகளில், உற்பத்தி, ஆட்டோமொபைல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கப்பல் கட்டுமானம் மற்றும் விண்வெளித் துறை சார்ந்த நிறுவனங்கள் சுமார் ரூ.80,000 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்யவுள்ளன.

இதன் மூலம் நமது மாவட்டத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 30,000 முதல் 40,000 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னை, கிருஷ்ணகிரிக்கு அடுத்தபடியாகச் சிறந்த துறைமுக உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரச் சாதகமான சூழல் இருப்பதால் தூத்துக்குடியை நோக்கி முதலீட்டாளர்கள் வருகின்றனர்.

இத்தொழிற்சாலைகளுக்குத் தேவையான திறன்மிக்க மனிதவளத்தை நமது மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி, ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களிடம் இருந்தே உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.

தொழிற்சாலைகளின் அடுத்த 5-10 ஆண்டுகாலத் தேவைகளைக் கணித்து, ஐ.டி.ஐ. உள்ளிட்ட தொழிற்பயிற்சி நிறுவனங்களின் பாடத்திட்டங்களில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து விரிவான அறிக்கை தயார் செய்து, திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் அரசுக்குப் பரிந்துரைக்கப்படும்" என்று ஆட்சியர் தெரிவித்தார்.

thiran26Meeting.jpg

இம்மாநாட்டில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி.பிரியங்கா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் நா.சரவணன், தூத்துக்குடி சார் ஆட்சியர் விவேக் யாதவ், உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளர் ஸ்வர்ணலதா, ஹெச்.சி.எல். உதவிப் பொது மேலாளர் வைபவ் சௌகான் மற்றும் அரசு, தனியார் துறைப் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.